இந்திய நிதியமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட வரியை (Windfall Tax) நீக்குவது குறித்து ஆய்வு செய்யும் என பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் முதன்முதலில் விதிக்கப்பட்ட இந்த விண்ட்ஃபால் வரி, தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதாக உள்ளது என தருண் கபூர் கூறினார். ஏனெனில் உலகளாவிய எண்ணெய் விலை 2022-ஐ விட கடுமையாகக் குறைந்துள்ளது. இப்படியிருக்கும் போது இப்போது வரி விதிப்பது சரியில்லை என தருண் கபூர் கூறுகிறார்.

"நிதியமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யும். பெட்ரோலியம் அமைச்சகம் ஏற்கனவே மத்திய நிதியமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது" என்று கபூர் ஒரு நிகழ்ச்சியின் ஓரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடைசியாக மத்திய நிதியமைச்சகம் , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 11.9 சதவீதம் குறைத்து, ஆகஸ்ட் 31 முதல் டன் ஒன்றுக்கு ரூ.2,100லிருந்து ரூ.1,850 ஆக குறைக்கப்பட்டது. இப்போது டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி மீதான வரியை ஜீரோவாக தொடரும் என அறிவித்து இருந்தது.
Windfall Tax என்பது சில குறிப்பிட்ட தொழில்கள், பொருளாதார நிலைமைகளால் இயல்பான வர்த்தக நடைமுறையை தாண்டி அதிக லாபம் ஈட்டும் போது அரசாங்கம் விதிக்கும் ஒரு வரியாகும்.
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைத்தது. இதனால் இந்திய அரசு இந்தத் தொழில்களில் இருந்து அதிகப்படியான லாபத்தை வசூலிக்கும் நோக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் மீது சிறப்பு வரியை விதித்தது.
இந்த வரி கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களின் வருமானத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால், பின்னர் உலகளாவிய எண்ணெய் விலை குறைந்ததால் இந்த வரியை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்தது, ஆனால் முழுமையாக நீக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் 2022 ஆம் ஆண்டின் நிலவிய வர்த்தக சூழ்நிலை தற்போது இல்லை என்பதற்காகப் பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் புதன்கிழமை மத்திய நிதியமைச்சகம் வரியை நீக்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications