டெல்லி: இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என எக்ஸ் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
துஷார் சர்மா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "நாட்டுக்காக உங்களின் பங்களிப்பு மற்றும் முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், நீங்கள் எங்களின் மேலான அபிமானத்தை பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதையும் கொஞ்சம் பரிசீலனை செய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"இதில் என்னென்ன சவால்கள் இருக்கின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் நான் இதயபூர்வமான வேண்டுகோளை உங்களுக்கு முன் வைக்கிறேன்" என அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். துஷார் சர்மாவின் இந்த பதிவை டேக் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதில்," உங்களின் கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதலுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.
"உங்களின் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் தரக்கூடிய ஒரு அரசு எனக் கூறியுள்ளார். மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஒரு அரசு என தெரிவித்துள்ள அவர், உங்களின் புரிதலுக்கு நான் மீண்டும் நன்றி கூறுகிறேன் , உங்களின் கருத்து மிகவும் மதிப்பு மிக்கது என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். விலைவாசி உயர்வு பலரையும் திக்கு முக்காட வைத்துள்ளது. இதற்கு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களே சான்றாக அமைந்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சில்லறை பண வீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள ஏற்கக்கூடிய வரம்பை விட அதிகமாகும். அதே போல இந்தியாவில் உணவு பணவீக்கமும் கடந்த செப்டம்பரில் 9.24 சதவீதம் என இருந்து அக்டோபரில் 10.87 சதவீதம் என உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டிலேயே அக்டோபரில் தான் உணவு பணவீக்கம் 10.87 சதவீதம் என உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மக்கள் உணவு பொருட்களுக்காக அதிக செலவிட நேர்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலை செப்டம்பரை விட அக்டோபரில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications