2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தல் அனைத்து தரப்புக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது, முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய முதலீட்டை காப்பாற்ற வேண்டும் என்ற இலக்கில் இருக்கும் வேளையில், மக்கள் மத்தியில் பிஜேபி, காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடுமையாக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த மாதம் ஜெப்ரீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான கிரிஸ் வுட் பேச்சின் மூலம் அதிர்ச்சியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாக இருக்கும் ஜெப்ரீஸ் நிறுவனத்தின் சர்வதேச பங்குச்சந்தை திட்டமிடல் பிரிவின் தலைவரான கிரிஸ் வுட் இந்திய தேர்தல் குறித்து முக்கியமான கருத்தை முன்வைத்தார்.
கிரிஸ் வுட் கலந்துகொண்ட பிசினஸ் ஸ்டாண்டர்ட் சம்மிட் 2023 கூட்டத்தில் பேசிய போது இந்தியாவில் 2024 பொதுத் தேர்தலில் பிஜேபி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடிக்காவிட்டால் இந்திய பங்குச்சந்தை சுமார் 25 சதவீதம் வரையில் சரியும் எனவும், ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்தச் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் துபாயில் நடந்த இந்தியன் குளோபல் ஃபோரம் கூட்டத்தில் விர்ச்சுவல் முறையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதார வளர்ச்சி முதல் அடுத்து நடக்க உள்ள COP28 கூட்டம் வரையில் பேசினார். இக்கூட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தல் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகள் குறித்துப் பதற்றமாக இருப்பதாகக் கேள்வி எழுந்தது. இதற்குப் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச முதலீட்டாளர்கள் எவ்விதமான பதற்றமும் அடையத் தேவையில்லை, பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மை வாக்குகள் உடன் வருவார்.
இந்தியப் பொருளாதாரம், அரசியல், கள நிலவரம் குறித்துப் பல தரப்புகள் ஆய்வு செய்து வருகிறது, அனைத்துமே பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருவார் என்பதைத் தான் கூறுகிறது என நிர்மலா சீதாராமன் பேசினார். இதேவேளையில் தேர்தல் காரணமாகச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பதற்றமான நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் அதற்கான அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications