மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் எப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் விலை பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளதால், தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அடுத்த சில வாரத்தில் மக்கள் வாங்கும் பிஸ்கட் முதல் சமையல் எண்ணெய் வரையில் அனைத்து பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட உள்ளது. இதனால் மக்களுக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எப்எம்சிஜி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான மாரிகோ ஏற்கனவே தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், இதன் எதிரொலி மற்றும் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பதைச் சக போட்டி நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகிறது.
புதிய கொரோனா தொற்று
மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் போது மக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது அவர்களுக்கு கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மாரிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து டாபர், பார்லே, பதஞ்சலி ஆகிய நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே எப்எம்சிஜி நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய், பாம் ஆயில் ஆகியவற்றின் உற்பத்தி பொருட்களின் விலை ஏற்றத்தை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பழைய விலையிலேயே விற்பனை செய்த நிலையில் விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் தற்போது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.
சமையல் எண்ணெய் விலை
குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக எண்ணெய் வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, குறிப்பாகச் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்தப் பாதிப்பை மக்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் நிலையில் அடுத்த சில வாரத்தில் பிற நுகர்வோர் பொருட்களின் விலை உயர உள்ளது.


Click it and Unblock the Notifications