தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி மிடில்கிளாஸ் மக்களை ஒரு புறம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் முன்னணி FMCG நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்கான விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டிலும் முக்கியமான செலவாக இருப்பது மளிகை பொருட்களும், அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களும் தான். காலையில் எழுந்து குடிக்கும் காபி முதல் குளிக்கும் சோப்பு வரை நுகர்வோர் பொருட்களின் விலையை உயர்த்த அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இந்த விலை உயர்வுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பேக்கேஜிங் செலவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களைத் தயாரிப்பதற்கான செலவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதோடு தயாரித்து முடித்த பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல லாஜிஸ்டிக்ஸ் கட்டணமும் அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததே இதற்கு காரணம். இவை இரண்டும் சேர்ந்து எஃப்எம்சிஜி நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. அந்த சுமையை வேறு வழியின்றி நிறுவனங்களும் நுகர்வோர் மீது திணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஏற்கனவே FMCG பொருட்கள் 3 முதல் 5 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. இதற்கு அந்நிறுவனங்களின் நிர்வாகிகள் பணவீக்கம், போக்குவரத்து செலவுகள், நாணய மதிப்பிழப்பு, பூவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றைக் காரணம் காட்டியுள்ளனர். இனிவரும் காலத்திலும் இதேபோன்று விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முக்கியமாக 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன. கூலி தொழிலாளர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவரும் 5 ரூபாய், 10 ரூபாய் பேக்குகளை விரும்பி வாங்குகின்றனர். அப்படி இருக்கையில், விலையை மாற்றினால், விற்பனை சரிவு ஏற்படும் என்ற காரணத்தினால் விலையை மாற்றாமல் எடையை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
பிஸ்கட்: முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா தனது மேரி கோல்ட், குட்டே போன்ற பிஸ்கட்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. 20% வரை எரிபொருள் செலவு மற்றும் பேக்கேஜிங் செலவு அதிகரித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டானியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான ரக்ஷித் ஹர்காவே தெரிவித்துள்ளார்.
சோப்பு மற்றும் ஷாம்பூ: சர்ப் எக்ஸெல், டவ், கிளினிக் பிளஸ், சன் சில்க் போன்ற முக்கியமான பிராண்டுகளைக் கொண்ட முன்னணி FMCG நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் (HUL). இந்நிறுவனமும் தங்களுடைய உற்பத்தி பொருட்களில் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பயன்படுத்தும் மூலப் பொருட்களின் விலை இதுவரையில் 8 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் ஏற்கனவே 2 முதல் 5 சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் CFO நிரஞ்சன் கூறியிருக்கிறார்.
ஃபெவிகால், டாக்டர் ஃபிக்சிட், ஃபெவிக்குவிக் மற்றும் எம்-சீல் போன்ற பிரபலமான பிராண்டுகளைச் சொந்தமாகக் கொண்ட பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், நிறுவனமும் தங்களுடைய பொருட்களின் விலையை உயர்த்த தயாராகி வருகிறது.
அதே போன்று நிறுவனங்கள் சாதூரியமாக விலை உயர்வை அமல்படுத்தி வருகின்றன. பொருட்களின் விலையை உயர்த்தினால் மக்கள் அந்த பொருட்களை வாங்க மாட்டார்கள் என்பதற்காகவே, சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களின் எடையை குறைக்க தொடங்கியுள்ளன. இதனால் சந்தையில் அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை என்னவோ 5 ரூபாயாக அப்படியே இருக்கும். ஆனால் முன்னர் வாங்கிய எடைக்கும் தற்போது வாங்கும் எடைக்கும் வித்தியாசம் இருக்கும்.
குளிர்பானங்கள் மற்றும் குடிநீரின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. மேரிகோ நிறுவனமும் பாராசூட், சபேலா போன்ற பிராண்டுகளின் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க, விலை உயர்வை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தான் பேராஷூட், லிவோன் போன்ற சிகை அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறது. இதிலும் 6 முதல் 7 சதவீதம் வரையிலான விலை உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் டாடா நிறுவனம் தற்போது வரையில் எந்த விலை உயர்வையும் அமல்படுத்தவில்லை. இந்நிறுவனம் டீ, காபி, உப்பு என பல்வேறு பொருட்களை தயாரிப்பதால் இன்று வரை விலை உயர்வை சமாளித்து வருவதாகக் கூறியுள்ளது.
எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்த 1,000 காரணங்களை கொண்டிருந்தாலும் இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ மிடில் கிளாஸ் மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் இன்னமும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தான் அவர்களுடைய சம்பளம் நிற்கிறது. இது போன்ற சூழ்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், தங்களுடைய தேவையை சுருக்கிக் கொண்டு காலத்தை கடக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இன்று பல குடும்பங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications