மும்பை: அண்மையில் மறைந்த ரத்தன் டாடாவின் வழியை பின்பற்றி இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் 20,000 கோடி ரூபாயை மக்கள் நலப்பணிகளுக்காக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பணக்காரர்கள் இருந்தாலும் ரத்தன் டாடா போன்றவர்களை மக்கள் கொண்டாடுகின்றனர் . இதற்கு முக்கிய காரணம் அவர்களின் செல்வத்தில் பெரும் பகுதியை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக வழங்குகியுள்ளனர் , மேலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனர் என்பது தான். இப்படி மக்கள் நலனுக்காக பணத்தை வழங்க வேண்டும் அது தொழிலதிபர்களின் பங்கு என உணர்த்தியவர் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா அவர்களை பின்பற்றி ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அபிஷேக் லோதா தன்னுடைய சொத்தில் 20,000 கோடி ரூபாயை பல்வேறு நல பணிகளுக்காக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் லோதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக இருக்கும் பங்குகளை தங்கள் குடும்பத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாக அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார்.
மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் என்பது இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.10 லட்சம் கோடி ரூபாய் இதில் 72% பங்குகளை லோதா குழுமம் கொண்டுள்ளது.
மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்பது இந்தியாவில் லோதா என்ற பிராண்டின் ரியல் எஸ்டேட் விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் லோதா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது. இதன்படி அபிஷேக் லோதா மற்றும் அவரது குடும்பத்தினர் மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளில் 18 முதல் 19 சதவீத பங்குகளை இந்த அறக்கட்டளை பணிகளுக்காக வழங்க உள்ளனர்.
இதற்காக வரும் ஜனவரி மாதம் ஒரு குழு நியமனம் செய்யப்படும் என அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார் . கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அறக்கட்டளை வழங்கும் எனக் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த பங்குகளில் கிடைக்கும் ஈவுத்தொகையும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் டாடா குழுமம் தங்களுடைய சொத்தின் பெரும்பகுதியை டாடா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை உருவாக்கி அதற்கு வழங்கியது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வழியை பின்பற்றி தான் தற்போது நாங்கள் லோதா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை நிறுவி இருக்கிறோம் என அபிஷேக் லோதா தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications