இத்தாலி: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அடுத்த மாதம் ராதிகா மெர்சன்டுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு முன்பாக இரண்டு பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை அம்பானி குடும்பத்தினர் நடத்தி முடித்திருக்கின்றனர்.
அண்மையில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் மூன்று நாட்களுக்கு இந்த திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் அரங்கேறின. இதற்காக இத்தாலியின் ஒரு கடற்கரை நகரத்தையே அம்பானி குடும்பத்தினர் தங்கள் விருந்தினர்களுக்காக பதிவு செய்து வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமண நிகழ்வுகளை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்த வேண்டும் என முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கேற்ற வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இரண்டாவது கொண்டாட்டம் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
விண்வெளி கருப்பொருளை மையமாக கொண்ட சொகுசு கப்பலில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்களில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டிக்காக அம்பானி குடும்பத்தினர் இத்தாலியின் கடற்கரை நகரமான போர்ட்டோ ஃபினோவை(Portofino) முழுவதுமாக தங்களுக்காக மட்டுமே முன் பதிவு செய்து வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்டின் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தில் சுமார் 1200 விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்காக அந்த மொத்த நகரத்தையுமே அம்பானி குடும்பத்தினர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது புகழ்பெற்ற பாடகரான Andrea Bocelli விருந்தினர்களுக்காக Falling in Love with You என்ற சிறப்பு பாடலை பாடியள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல அமெரிக்க பாப் பாடகி கேடி பெர்ரி மற்றும் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் இசைக் குழுவினரின் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியும் விருந்தினர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக அமைந்திருந்தது. இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சொகுசு கப்பலில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் படங்கள் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. மே 29ஆம் தேதி மிகப்பெரிய மதிய உணவு விருந்துடன் தொடங்கிய இந்த திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி, மே 30ஆம் சொகுசு கப்பலில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாக நடைபெற்றது. மே 30ஆம் தேதி இத்தாலியின் ரோம் நகரில் விருந்தினர்கள் சுற்றி பார்த்தனர். இதனை எடுத்து இரவு விருந்து மற்றும் இரவு ஒரு மணி அளவில் ஆஃப்டர் பார்ட்டி என்பது தொடங்கியது.
மே 31ஆம் தேதி பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் அதனை அடுத்து பிரான்சின் கேன்ஸில் கொண்டாட்டமும் இறுதியாக ஜூன் ஒன்றாம் தேதி இத்தாலியின் போர்ட்டோஃபினோ நகரில் பார்ட்டியுடனும் கொண்டாட்டம் முடிவடைந்தது . இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஷாருக்கான், சல்மான்கான், சாரா அலி கான், அனன்யா பாண்டே, ரன்வீர் சிங், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் மும்பை ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் திருமணமும் வரவேற்பும் நடைபெற உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications