இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய நாராயணமூர்த்தி பரிசு வழங்க வேண்டும் என்றால் இன்போசிஸ் நிறுவன பங்குகளை தான் பரிசாக வழங்குவார்.
கடந்த ஆண்டு கூட தன்னுடைய பேரப்பிள்ளைக்கு இன்போசிஸ் நிறுவன பங்குகளை பரிசாக வழங்கி பிறந்த சில மாதங்களிலேயே பேரனை கோடீஸ்வரனாக மாற்றியவர் நாராயணமூர்த்தி. இவர் மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக பெற கூடாது என்ற விதிமுறை மாற்றப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்திற்கு நான் என்னுடைய இன்போசிஸ் நிறுவன பங்குகளை நன்கொடையாக வழங்க விரும்பினேன் , ஆனால் இந்தியாவில் கல்வி நிறுவனங்களுக்கு ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்குவது கிடையாது என்பதால் அந்த சமயத்தில் ஐஐடி கான்பூர் நான் வழங்கிய 8 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் பங்குகளை ஏற்க மறுத்துவிட்டது என கூறியுள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் 8 கோடி ரூபாயு மதிப்புடன் இருந்த இன்போசிஸ் பங்குகளை ஐஐடி கான்பூர் ஏற்றிருந்தால் தற்போது அதன் மதிப்பு 2000 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கும். இன்போசிஸ் நிறுவனத்தின் 8 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளின் மதிப்பு தற்போது 256 மடங்கு உயர்ந்திருப்பதாக கூறியிருக்கிறார். அரசின் விதிமுறை காரணமாக என்னால் ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக வழங்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ள அவர், அந்த பங்குகள் மூலம் ஐஐடி கான்பூருக்கு ஈவு தொகையாக மட்டுமே 500 கோடி ரூபாய் கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக பெறக் கூடாது , தங்கள் வசம் இருக்கும் பணத்தை ஈக்குவிட்டி சந்தைகளில் முதலீடு செய்யக்கூடாது என்ற விதிமுறை அமலில் இருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் கல்வி நிறுவனங்கள் ஃபிக்சட் டெபாசிட் தவிர வேறு எந்த திட்டங்களிலும் முதலீடு செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருப்பது கல்வி நிறுவனங்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தி வருவதாக கூறுகிறார்.
அதே போல பெங்களூரு ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்திற்கு தான் வழங்க இருந்த பங்குகளை அவர்கள் ஏற்றிருந்தால் தற்போது அதன் மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்திருக்கும் ,இது தவிர இந்த கல்வி நிறுவனம் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாயை ஈவு தொகையாக மட்டுமே பெற்று இருக்கும் என அவர் தெரிவித்து இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் ஈக்விட்டி பங்குகளை நன்கொடையாக பெற அனுமதிக்கப்படுகின்றன, இந்தியாவும் அதனை பின் தொடர வேண்டும் என நாராயணமூர்த்தி கேட்டு கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications