இந்தியாவின் விண்வெளித் துறைக்கும் நாம் செய்யும் ஒவ்வொரு 1 டாலர் செலவு/முதலீடும் தேசிய பொருளாதரத்திற்கு 2.54 டாலர்களை வருமானமாக ஈட்டி தந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய விண்வெளி திட்டங்களின் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் (Socio economic impact analysis of Indian space programme) என்ற தலைப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டது.
சர்வதேச அளவில் சிக்கனமான விண்வெளி தொழில்நுட்பங்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் போனது தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. இந்த இஸ்ரோவில் நாம் செய்யும் ஒவ்வொரு டாலர் முதலீட்டிற்கும் நமக்கு 2.54 டாலர்கள் வருமானம் வருவதாக தெரியவந்துள்ளது.

அதாவது நமது விண்வெளி திட்டங்களுக்கான நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் நமக்கு பல மடங்கு லாபத்தை பெற்று தருகின்றனவாம். இந்திய விண்வெளித் துறை கடந்த 10 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமது ஜிடிபிக்கு 60 பில்லியன் டாலர்களை பங்களிப்பாக செய்திருப்பது இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வு திட்டங்கள் மூலம் நாட்டில் 4.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் நேரடியாக பொது மற்றும் தனியார் துறையில் சுமார் 96 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று இருப்பதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார தாக்கம் என்பது பாசிட்டிவான வகையில் இருக்கும், அதே வேளையில் சமூக ரீதியான தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்த ஆய்வு இதில் இடம் பெற்றுள்ளது.
அதாவது விண்வெளி துறையில் நமது தேசத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது மற்றும் ஒரு மிகப்பெரிய பெயரையும் விண்வெளி திட்டங்கள் பெற்றுத் தந்துள்ளன. விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடாக இந்தியாவுக்கு ஒரு நிலையான இடத்தை இவை பெற்று தந்துள்ளன.
யூட்யூபில் சந்திரயான் 3 திரையரங்கிய காட்சியை சுமார் 80 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், அதுவே சமூக ரீதியாக இது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விளக்குகிறது. அது மட்டும் இன்றி இஸ்ரோ நடத்தக்கூடிய விண்வெளி சார்ந்த திட்டங்களில் 5 லட்சம் பேர் பங்களித்துள்ளனர். நமது இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களால் ஒரு நாளுக்கு 8 லட்சம் மீனவர்கள் பயன்பெறுகின்றனர். இதனால் மீன் பிடிக்கும் தன்மையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல 280 இந்திய நிறுவனங்களுக்கு சுமார் 550 தொழில்நுட்பங்களை நமது இஸ்ரோ வழங்கியுள்ளது. விமான போக்குவரத்து துறையை பொருத்தவரை இஸ்ரோவின் திட்டங்கள் மூலமாக எரிபொருள் பயன்பாடு 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் இஸ்ரோ நமக்கு திரும்ப பல மடங்கு வழங்கி இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications