பெங்களூரு: இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடக மாநில அரசு குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் (Global Capability Centres policy (GCC)) எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகளுக்கான வரைவு கொள்கையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய ஜிசிசி மையங்களை நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
இவர்களின் முதல் முதல் விருப்பமாக இருப்பது பெங்களூரு தான். இந்த நிலையில் மேற்கொண்டு ஜிசிசி மையங்களை ஈர்ப்பதற்காக கர்நாடக மாநில அரசு ஜிசிசி கொள்கை 2024 -2029 என்பதை வகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இப்படி ஒரு கொள்கை உருவாக்கிய மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த கொள்கையின் மூலம் 2029 ஆம் ஆண்டுக்குள் கர்நாடகாவில் கூடுதலாக 500 ஜிசிசி மையங்களை நிறுவுவது என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனால் கர்நாடகாவில் 3.5 லட்சம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்றும் பொருளாதாரப் பங்களிப்பு 50 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவில் தான் ஜிசிசி மையங்கள் அதிகமாக இருக்கின்றன. அதாவது நாட்டில் உள்ள ஜிசிசி மையங்களில் சுமார் 30 சதவீதம் கர்நாடகாவில் இருக்கிறது. ஜிசிசி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 35 சதவீதம் பேர் கர்நாடகாவில் தான் பணி புரிகின்றனர்.
தற்போது 500 ஆக இருக்கும் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதற்காகவே கர்நாடகா அரசு இப்படி ஒரு பாலிசியை வெளியிட்டுள்ளது. ஜிசிசி மையங்களை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்குவதற்கும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஜிசிசி சார்ந்த துறை ஆண்டுதோறும் 12 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சி அடையும், எனவும் இதில் 50 சதவீத மையங்கள் கர்நாடகாவில் தான் அமையும் என்றும் இந்த கொள்கை தெரிவிக்கிறது.
முன்னதாக இந்த கொள்கையை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடந்த சில ஆண்டுகளில் ஜிசிசி மையங்களின் வேலையின் தன்மை பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜிசிசி மையங்களில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்டவையும் சேர்த்து செய்யப்படுகின்றன எனக் கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தற்போது 1.2 மில்லியன் பேர் ஜிசிசி மையங்களில் பணிபுரிகின்றனர் என்றும் இதன் பொருளாதார பங்களிப்பு 22.2 பில்லியன் டாலர்களாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கர்நாடகாவின் வளர்ச்சிக்கு ஜிசிசி மையங்கள் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்த அவர் பெங்களூருவை தாண்டி கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற ஜிசிசி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இந்த கொள்கையின் பிரதானமான நோக்கம் என தெரிவித்தார். பொதுவெளியில் இந்த வரைவு முன் வைக்கப்பட்டுள்ளது, மக்கள் , நிறுவனங்கள் இந்த கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications