டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் என்றால் அது இந்திய ரயில்வே தான். ஆண்டுதோறும் கோடிக்கணக்கிலான பயணிகளின் சீரான போக்குவரத்துக்கும் , லட்சக்கணக்கிலான டன் சரக்குகளை கையாள்வதிலும் திறம்பட செயல்படுகிறது ரயில்வே நிர்வாகம். இப்படி இந்திய ரயில்வேயின் செயல்திறனுக்கு காரணமாக இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு பண்டிகை கால போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சுமார் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் 78 நாட்கள் சம்பளத்தை போனஸ் தொகையாக பெற உள்ளனர். Productivity Linked Bonus அதாவது செயல்திறன் இணைக்கப்பட்ட போனஸ் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 11,72,260 non-gazetted ரயில்வே ஊழியர்கள் போனஸ் தொகையை பெற உள்ளனர். ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல் திறனை அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்காக மத்திய அரசு கூடுதலாக 2,028.57 கோடி ரூபாயை செலவிடுகிறது. தகுதி பெறும் ஊழியர் அவர்களின் சம்பளத்தை பொறுத்து அதிகபட்சமாக 17,951 ரூபாய் வரை போனஸ் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் செயல்திறன் இணைக்கப்பட்ட போனஸ் என்பது ஏழாவது ஊதிய குழுவின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய ரயில்வே ஊழியர்களுக்கான கூட்டமைப்பு ரயில்வே துறை அமைச்சரிடம் ஆறாவது ஊதிய குழுவின் அடிப்படையில் போனஸ் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு ஏழாவது ஊதிய குழுவின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று தற்போது ஏழாவது ஊதிய குழுவின் அடிப்படையில் போனஸ் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
ஏனெனில் ஆறாவது ஊதிய குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 7000 ரூபாய் தான், அதுவே ஏழாவது ஊதிய குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாய் ஆகும். ரயில்வே ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு 2016 ஆம் ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டாலும் போனஸ் மட்டும் ஆறாவது ஊதிய குழுவின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் மற்றும் கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான உதவியாளர்கள், பாயிண்ட்ஸ் மேன் மற்றும் பிற ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்கள் இந்த போனஸை பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர். துர்கா பூஜை/ தசரா பண்டிகைக்கு முன்னரே இந்த போனஸ் தொகையானது வழங்கப்படுகிறது.
ரயில்வே துறையினை பொறுத்தவரை நடப்பாண்டில் 6.7 பில்லியன் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது, அதே போல 1588 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 11,07,346 ரயில்வே ஊழியர்கள் மொத்தமாக 1968.8.7 கோடி ரூபாய் தொகை போனஸை பெற்றனர். கடந்தாண்டு ரயில்வே நிர்வாகம் 1509 மில்லியன் டன் சரக்குகளையும் 6.5 பில்லியன் பயணிகளையும் கையாண்டு இருந்தது.
Written by: Devika


Click it and Unblock the Notifications