சென்னை: முதன்முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நான்கு வழிச்சாலை திட்டங்களை மாநில அரசின் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றியுள்ளது. தமிழ்நாடு மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை இதுபோன்ற பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கையாள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாலை விரிவாக்க பணிகளையும் சாலை கட்டமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருவதால் பனிச்சுமை அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. எனவே தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில திட்டங்களின் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்துள்ளது.'

இதன்படி தூத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம்- ராமேஸ்வரம் -தனுஷ்கோடி வழித்தடம், கோவை - சத்தியமங்கலம் வழித்தடத்தில் இரண்டு வழிச்சாலை, சத்தியமங்கலம் - கர்நாடக எல்லை வழி சாலைத்திட்டங்கள் ஆகியவை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அது போக கூடுதலாக சில பைபாஸ் திட்டங்களும் மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை , கிழக்கு கடற்கரை சாலை முதல் தூத்துக்குடி கன்னியாகுமரி இடையே திருச்செந்தூர் வழியாக 120 கிலோமீட்டர் சாலையை அகலப்படுத்துவதற்கான ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்கு தேவையான நிலத்தை பெறுவதற்கு 393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் - நாகை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் 120 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தூத்துக்குடி- கன்னியாகுமரி சாலை அமைக்கும் பணிகள் தான் தற்போது மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை -சத்தியமங்கலம் - தமிழகம், கர்நாடக எல்லை சாலை அமைக்கும் பணிகளுக்கு 639 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிய உடன் வேலை தொடங்க இருப்பதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல வேலூர், வேட்டவளம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பைபாஸ் சாலைகளை அமைக்கும் பணிகளும் மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு 559 கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications