இந்த ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் தரவரிசையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரின் நிகர சொத்து மதிப்பு 105 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த ஆண்டின் 119.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இவரின் சொத்து மதிப்பு 14.5 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. ஆனாலும், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தை அறிவித்ததன் மூலம், அம்பானி தொடர்ந்து புதிய துறைகளில் தனது முதலீடுகளை விரிவுபடுத்தி வருகிறார்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கெளதம் அதானி, 92 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 116 பில்லியனாக இருந்த இவரின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 20% குறைந்துள்ளது.
இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால், 40.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மறைந்த கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் நிறுவிய ஓ.பி. ஜிண்டால் குழுமம், எஃகு உற்பத்தி, சுரங்கம், மின் உற்பத்தி, சிமெண்ட் தயாரிப்பு மற்றும் துறைமுகங்கள் எனப் பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் மிட்டல், 34.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு 7-வது இடத்தில் இருந்த சுனில் குடும்பச் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 30.7 பில்லியனில் இருந்து கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்திய ஐடி துறையின் முன்னோடியும், எச்.சி.எல் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஷிவ் நாடார், 33.2 பில்லியன் டாலர் மதிப்புடன் 5-வது இடத்தில் உள்ளார். எனினும், கடந்த ஆண்டு 33.6 பில்லியன் டாலராக இருந்த இவரின் சொத்து மதிப்பு சற்று குறைந்துள்ளது.
டிமார்ட் சில்லறை வணிகச் சங்கிலியின் நிறுவனர் ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பத்தினர், 28.2 பில்லியன் டாலர் மதிப்புடன் 6-வது இடத்திலும், திலீப் சங்வி 7-வது இடத்திலும், பஜாஜ் குழுமம் 8-வது இடத்திலும், சைரஸ் பூனாவாலா 9-வது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா 10-வது இடத்திலும் உள்ளனர்.
புதிய பணக்காரர்களின் வருகை இந்த ஆண்டின் பட்டியலில் கவனிக்கத்தக்கது. தோஷி சகோதரர்கள் 7.5 பில்லியன் டாலர் மதிப்புடன் 37-வது இடத்திலும், டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சுனில் வசானி 3.85 பில்லியன் டாலர் மதிப்புடன் 80-வது இடத்திலும் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் குறைந்து, தற்போது 1 டிரில்லியன் டாலராக உள்ளது. உலகளாவிய சந்தை அழுத்தங்கள் மற்றும் முதலீட்டுச் சரிவுகள் இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications