பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 39 ஆவது உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் 3000க்கும் அதிகமானோர் இடம் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர்.
முதல் முறையாக உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்திருக்கிறது. மொத்தமாக இவர்கள் அனைவரின் வசம் இருக்கும் சொத்தின் மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்கா மற்றும் சீனாவை தவிர்த்து உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மொத்த ஜிடிபி உடன் ஒப்பிடும்போது இந்த மூன்றாயிரம் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறது என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.

இந்த பணக்காரர்கள் பட்டியலில் 200 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களாக மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர். 15 பேர் 100 பில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைந்துள்ளனர். அந்த வகையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அவருடைய சொத்து மதிப்பு 342 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த ஓராண்டு காலத்தில் இவரின் சொத்து மதிப்பில் 147 பில்லியன் டாலர்கள் சேர்ந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் கூறுகிறது.
அடுத்ததாக மெடா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க் 216 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் முறையாக இவர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 215 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஒராக்கில் நிறுவனத்தின் லாரி எலிசன் 192 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். 178 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு அர்னார்டு பெர்னால்ட் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக பில்லியனியர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் 902 பில்லினியர்களும், சீனாவில் 516 பில்லினியர்களும் இருக்கின்றனர். இந்தியாவில் 205 பில்லியனியர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரபல ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 416 பெண்களும் இடம் பிடித்துள்ளனர். உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அலைஸ் வால்டன். இவர் 101 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக்கு உரிமையாளராக இருக்கிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு 18 வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு 92.5 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அடுத்ததாக கௌதம் அதானி 28 வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 56.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications