புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், மார்ச் 31 முதல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் தனது டிராக்டர் வணிகத்தை மொத்தமாக நிறுத்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த முடிவு, போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ், பகிர்வு போக்குவரத்து, லாஸ்ட் மைல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் சிவில் பயன்பாடுகளுக்கான சிறப்பு வாகனங்கள் தயாரிப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டில், வேளாண்மை டிராக்டர் விற்பனை என்பது, இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 3.66 சதவீதமாக இருந்தது என்று ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. குறைந்த வருவாய் பங்கீட்டை கொண்ட இந்த பிரிவில் கவனத்தை செலுத்துவதை காட்டிலும், அதிக வருவாய் மற்றும் வாடிக்கையாளர் விருப்பம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது போர்ஸ் மோட்டார்ஸ்.
பிப்ரவரி 2024ல் இந்தியாவில் மொத்தம் 76,626 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இதில் முதல் இடத்தை மஹிந்திரா 17,490 டிராக்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது, இதை தொடர்ந்து மஹிந்திராவின் ஸ்வராஜ் 14100 டிராக்டர்களும், சோனாலிகா 9841 டிராக்டர்களையும், TAFE 8307 டிராக்டர்களையும், எஸ்கார்ட்ஸ் 7,449 டிராக்டர்களையும் விற்பனை செய்து டாப் 5 இடத்தில் உள்ளது. போர்ஸ் மோட்டார்ஸ் டாப் 10 இடத்தில் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பல இருக்கைகள் கொண்ட பயணிகள் வாகனங்கள் தயாரிப்பதற்கும், இந்தியாவில் பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்சிடீஸ் கார்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்கும் புகழ்பெற்றது இந்நிறுவனம். வாகன விற்பனை மூலம் சுமார் 48% வருவாயையும், ஒப்பந்த இன்ஜின் உற்பத்தி மூலம் சுமார் 36% வருவாயையும் ஈட்டுகிறது என்று இதன் கடந்த நிதியாண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் எழுச்சி காரணமாக இந்த நிறுவனத்தை தொடர்ந்து நான்காவது காலாண்டிலும் லாபம் ஈட்ட உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேன்கள், பிக்அப் டிரக்குகள், எஸ்யூவிகளை தயாரிக்கும் போர்ஸ் மோட்டார்ஸ் தலைவர் அபய் பிரோதியா இந்திய தொழில்துறையில் குறிப்பிடத்தக்கவர். 1958 ஆம் ஆண்டில் போர்ஸ் மோட்டார்ஸை அவரது மறைந்த தந்தை நவல்மால் பிரோதியா நிறுவினார்.
உலகளவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளான மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கான இன்ஜின்களை போர்ஸ் மோட்டார்ஸ் தான் தயாரித்து வழங்குகிறது.


Click it and Unblock the Notifications