சென்னை: அமெரிக்க கார் உற்பத்தியாளர் நிறுவனமான ஃபோர்ட், சென்னை மாறமலைநகரில் உள்ள தனது தொழிற்சாலையை ஜி.எஸ்.டபிள்யூ குழுமத்திற்கு விற்பனை செய்யும் பேச்சு கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன.
இதையடுத்து, ஃபோர்ட் இந்தியாவில் மீண்டும் வாகன உற்பத்தியைத் தொடங்கும் என பரவலாக கருத்து நிலவி வருவதற்கு ஏற்ப இரு முக்கிய கார்களுக்கான பெயரை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்திடம் இருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்றாலும், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகன உற்பத்திக்கான புதிய திட்டத்தில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு சென்னை தொழிற்சாலை இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேவேளையில் ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வாகனங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியம் இல்லை என சிலர் கூறிவருகின்றனர். அப்படியானால் ஜாக்வார் லேண்ட்ரோவர் போல் இந்தியாவின் விற்பனை உரிமையை யாருக்கேனும் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் சென்னையில் உள்ள அதன் ஃபோர்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதாவது தொழில்நுட்பத் பிரிவு வலுவாக வளர்ந்து வருகிறது. சுமார் 15,000-க்கும் மேற்பட்ட திறன்மிக்க ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஃபோர்ட் வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆன போதிலும், இந்தியா, ஃபோர்ட் நிறுவனத்திற்கான மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக தொடர்ந்து திகழ்கிறது. மேலும் ஃபோர்ட் நிறுவனத்தின் உலகளாவிய டெக் சேவைகளில் சென்னை அலுவலகத்தின் பங்கு மிகவும் பெரியது.
விந்ஃபாஸ்ட் (VinFast) என்ற வியட்நாம் நிறுவனம், சமீபத்தில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு, தொழிற்சாலை கட்டுமான பணிகளைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனமும் ஜி.எஸ்.டபிள்யூ குழுமத்தை போலவே ஃபோர்டு ஆலையை வாங்க ஆர்வம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நெருப்பின்றி புகையாது என்பதற்கு ஏற்றார் போல் ஃபோர்ட் எலக்ட்ரிக் கார் டிரெண்டுக்காக மாக் ஈ காரும், எஸ்யூவி டிரெண்டுக்காக எண்டேவர் காரும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் ஃபோர்ட் நுழையும் போது மஹிந்திரா குழுமத்துடன் சேர்ந்து 1990களில் ஸ்கார்ட்ஸ் கார்களை தயாரித்தது. இந்த நிலையில் ஃபோர்ட் சென்னை தொழிற்சாலை சாலையில் தனது கார்களை உள்நாட்டு வர்த்தகத்திற்கும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் தயாரித்தால், பழைய கூட்டணியில் மஹிந்திரா-வுக்கு இந்திய விற்பனை உரிமையை கொடுக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications