அமெரிக்காவின் புகழ் பெற்ற ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் இந்நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகன விற்பனையுடன் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் நுழைய முயற்சிகளை எடுத்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி இந்த தகவலை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கும் விற்பனையை விரிவாக்கம் செய்வதற்கும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தை பொறுத்தவரை இதற்கு முன்பு இந்திய சந்தையில் இருந்தபோது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் ஃபிகோ ஸ்மால் கார் மற்றும் ஈக்கோ ஸ்போர்ட் மினி எஸ்யூவி ஆகியவை இந்தியாவில் புகழ்பெற்ற கார்களாக இருந்தன.
அண்மைக்காலமாக மேற்கத்திய நாடுகளில் ஃபோர்டு நிறுவன கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்து வருகிறது. எனவே மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை திறப்பதற்கும் விற்பனையை தொடங்குவதற்கும் முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
ஃபோர்டு நிறுவனத்தை பொருத்தவரை சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த நிறுவனத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடையாது. எனவே தங்களுடைய எதிர்கால வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என இந்த நிறுவனம் கருதுகிறது. இதற்கான முறையான ஒப்புதல்கள் பெறுவதற்கான பணிகளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள தங்களுடைய ஆலையை மறுகட்டமைப்பு செய்து உற்பத்தியை தொடங்க கூடும் என சொல்லப்படுகிறது.
இதற்கான சட்ட ரீதியான தயாரிப்புகள் மற்றும் உற்பத்தியை தொடங்குவதற்கு தேவையான இயந்திரங்களை கொண்டு வருவது. மீண்டும் ஆலையை இயக்கத் தேவையான பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்களில் நிறுவனம் ஈடுபட வேண்டி இருக்கும். ஏற்கனவே ஃபோர்டு நிறுவனம் குஜராத்தில் இருந்த தங்களுடைய உற்பத்தி ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்து விட்டது.
ஆனால் சென்னையில் இருக்கும் ஆலையை இதுவரை அந்த நிறுவனம் விற்பனை செய்யவில்லை.1995 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் முதன் முதலில் இந்திய சந்தையில் கால் பதித்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் இந்தியாவில் வெற்றிகரமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வந்த ஃபோர்டு நிறுவனம் மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக செயல்பட்டு வந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications