சென்னை: உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையான இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேறுவதாக அறிவித்து, தனது தொழிற்சாலை, உற்பத்தி கட்டமைப்பு, சப்ளை செயின் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறிய அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு 3 வருடங்களுக்கு பின்பு தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய உள்ளது.
இந்த நிலையில் சென்னை மறைமலைநகரில் அமைந்துள்ள மாபெரும் தொழிற்சாலையில் எந்த மாடல் கார்களை தயாரிப்பது என ஆலோசித்து வந்த நிலையில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

ஃபோர்டு நிர்வாகம் சென்னை தொழிற்சாலையை மீண்டும் இயக்கினாலும், இதில் தயாரிக்கப்படும் கார்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்காகத் தயாரிக்கப்படும். அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டங்களை ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஆராய்ந்து வருகிறதாம்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா Bloomberg TV-க்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் போர்டு என்ன தயாரிக்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
"கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரும் புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஏற்கனவே இருக்கும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் செய்யும் முதலீடுகள் பெரும்பாலானவை EV பிரிவைச் சார்ந்து இருக்கிறது," என்று TRB ராஜா கூறினார். உலக நாடுகள் அனைத்து சுற்றுச்சூழல்-க்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இந்த பிரிவில் தான் ஃபோர்டு நிர்வாகமும் தனது புதிய வாகனங்களைத் தயாரிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
ஃபோர்டு மோட்டார் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது. இப்போது, எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ந்து வரும் உலகளாவிய சந்தையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் மீண்டும் நுழைய முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications