தற்போது பல சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திடமிருந்து ஃபார்ம் 16 பெறுவதற்காக காத்திருக்கின்றனர். ஊழியருக்கு வழங்கப்பட்ட சம்பளம், வரிமுறை மற்றும் ஊழியர் கோரியுள்ள விலக்குகள், சலுகைகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த சான்றிதழில் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட டிடிஎஸ் விவரங்களும் இருக்கும். இதுவே வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கியமான படிவமாகும்.
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு படிவம் 16-ஐ வழங்குவதற்கான கடைசி தேதி உள்ளதா?: வருமான வரி விதிகளின்படி, அந்தந்த முதலாளிகள் ஒரு நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான e-TDS வருமானத்தை அடுத்த நிதியாண்டின் மே 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். e-TDS தாக்கல் செய்யப்பட்டவுடன், 15 நாட்களுக்குள் TDS சான்றிதழை வழங்க வேண்டும், அதாவது ஜூன் 15 ஆம் தேதிக்குள் TDS சான்றிதழை வழங்க வேண்டும்.

வரி ஆலோசனை நிறுவனமான நங்கியா ஆண்டர்சன் இந்தியாவின் இணை நிறுவனரான சுபன் ஜெயின் கூறுகையில், படிவம் 16 ஊழியரின் சார்பாக அந்தந்த முதலாளிகள் டிடிஎஸ் கழித்ததற்கான சான்றிதழாகும். ஒரு முதலாளி டிடிஎஸ் கழித்துவிட்டு ஜூன் 15-ஆம் தேதிக்குள் படிவம் 16-ஐ வழங்கியாக வேண்டும்.
சரியான நேரத்தில் இந்தப் படிவத்தை வழங்கத் தவறினால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்ச அபராதத் தொகை முதலாளியால் கழிக்கப்பட்ட டிடிஎஸ் தொகை எவ்வளவோ.. அந்த அளவு வரை இருக்கலாம். முதலாளி அபராதத் தொகையை நேரடியாக மத்திய அரசின் கணக்கில் செலுத்தியாக வேண்டும். அபராதம் முதலாளிக்கு ஒரு கூடுதல் செலவாக இருக்கும்.
சம்பளம் பெறுபவர்கள் படிவம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா?: சம்பளம் பெறுபவர்கள் படிவம் 16 இல்லாமலும் வரி தாக்கல் செய்யலாம். உங்களிடம் படிவம் 16 இல்லை என்றால், வருமான வரி தாக்கல் செய்வதற்கு உங்களுடைய பே ஸ்லிப், வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), படிவம் 26AS போன்ற பிற ஆவணங்களை சேகரித்து தாக்கல் செய்யலாம்.
பான் கார்டைப் பயன்படுத்தி வருமானவரித்துறையின் இணையதளத்திலிருந்து படிவம் 16 டவுன்லோட் செய்ய முடியுமா?: சம்பளம் பெறும் ஊழியர்கள் படிவம் 16-ஐ வருமானவரித்துறையின் இணையதளத்திலிருந்து தங்களுடைய பான் கார்டு பயன்படுத்தியோ அல்லது பிடித்தம் செய்பவரின் பான் கார்டைப் பயன்படுத்தியோ டவுன்லோட் செய்ய முடியாது. இந்தப் படிவத்தை டிடிஎஸ் பிடித்தம் செய்பவர்கள் மட்டுமே ஊழியருக்கு வழங்க முடியும். பிடித்தம் செய்பவர் டிரேசஸ் போர்டலில் இருந்து பதிவிறக்கம் செய்த பின்னரே படிவம் 16-ஐ வழங்க முடியும். முதலாளிகள் e-TDS தாக்கல் செய்த உடன் தான் இந்த படிவம் 16 உருவாக்கப்படும்.
யார் தங்கள் முதலாளியிடமிருந்து படிவம் 16-ஐப் பெறுவார்கள்?: ஒரு முதலாளி தனது ஊழியருக்கு சம்பள வருமானத்தில் வரியை பிடித்தம் செய்திருந்தால் படிவம் 16-ஐ வழங்குவார். இந்த படிவம் 16 அனைவருக்கும் உரியதல்ல. உங்களுடைய வரி விதிக்கக்கூடிய சம்பளம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரி முறையைப் பொறுத்துதான் முதலாளி உங்களிடம் வரியைக் கழிப்பார்.


Click it and Unblock the Notifications