பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் டெல்லி அடுத்த குரு கிராம் பகுதியில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் டெல்லி குரு கிராம் பகுதியில் இருக்கும் டிஎல்எப்-இல் Dahlias என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 69 கோடி ரூபாய் கொடுத்து ஒரு ஆடம்பர குடியிருப்பை வாங்கி இருக்கிறார் .

சிஆர்ஈ மேட்ரிக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது. இவர் வாங்கி இருக்கும் வீட்டின் பரப்பளவு 6,040 சதுர அடி என சொல்லப்படுகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே இந்த வீட்டை அவர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி பத்திரப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .இந்த வீட்டை வாங்குவதற்காக இவர் பத்திரப்பதிவு கட்டணமாக மட்டும் 3.28 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை என்பது 65.61 கோடி ஆகும் , பதிவு கட்டணத்துடன் சேர்த்து ஷிகர் தவான் இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்காக 68.69 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறார். 5 பார்க்கிங் லாட்களுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுர அடியின் மதிப்பு 1,08,000 ரூபாய் ஆகும்.
இந்தியாவிலேயே சதுர அடிக்கு அதிகபட்ச விலை கொடுக்கப்பட்ட ஒரு சொத்து பரிமாற்றமாக இது இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. ஷிகர் தவான் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் சார்பாக களமிறங்கியவர். கடைசியாக இவர் 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
ஷிகர் தவான் இந்தியாவிற்காக 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள், 68 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்தியாவில் டெல்லி அருகில் இருக்கும் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள டி எல் எஃப் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆடம்பரமான சொகுசு குடியிருப்புகளாக பார்க்கப்படுகின்றன. இதில் தி டாலியாஸ் என்பது இந்தியாவிலேயே அதிக மதிப்பு கொண்ட ஒரு வீட்டு மனை திட்டமாக கருதப்படுகிறது. கிட்டதட்ட 17 ஏக்கர் பரப்பளவில் இங்கே 420 மிக ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த டாலியாஸ் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் தான் 150 கோடி ரூபாய்க்கு இரண்டு வீடுகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications