இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ட்ரோனி என்ற பெயரிலான ட்ரோனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த நுகர்வோர் பயன்பாடு மற்றும் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் பல சிறப்பம்சங்களை கொண்டது.
இது ஒரு ஆளில்லா ட்ரோன் என்றும் விவசாயத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது உள்பட பல முக்கிய பணிகளை இந்த ட்ரோன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருடா ஏரோஸ்பேஸ்
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே விவசாயி பூச்சிக்கொல்லி தெளிக்கும் ட்ரோன், சோலார் பேனல் சுத்தம் செய்யும் ட்ரோன் உள்பட பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்களை உருவாக்கி தருகிறது என்பதும், அவை மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது என்பதும் தெரிந்ததே.
ட்ரோனி ட்ரோன்
இந்த நிலையில் இந்நிறுவனம் தயாரித்த புதிய ட்ரோனை தல தோனி இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்தார். ட்ரோனி என்று அழைக்கப்படும் இந்த ட்ரோன் பேட்டரியில் இயங்கும். இந்த ஆளில்லா ட்ரோன் 30 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அம்சங்கள்
இதுகுறித்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் என்பவர் கூறியபோது, 'கருடா ஏரோஸ்பேஸ் பலவிதமான ட்ரோன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் எங்கள் புதிய தயாரிப்பான 'ட்ரோனி' ட்ரோன் உள்நாட்டு மற்றும் பல்வேறு கண்காணிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த ட்ரோன் திறமையானது, தடையற்றது மற்றும் உயர் தரமானது' என்று கூறியுள்ளார்.
விலை எவ்வளவு?
2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ட்ரான் சந்தையில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டாலும், இந்த ட்ரோனின் விலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications