புகழ்பெற்ற பிரிட்டானியா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் சுயாதீன இயக்குனராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை நியமனம் செய்துள்ளது. பங்குச்சந்தையில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை தங்கள் நிறுவனத்தின் கூடுதல் சுயாதீன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு அவர் இந்த பொறுப்பில் செயல்படுவார் என்றும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்கும் என பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உர்ஜித் படேல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக செயல்பட்டவர். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை இவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை வகித்தார். இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
2013 மற்றும் 2018 வரையிலான காலகட்டத்தில் ஜி-20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் குழுவிற்கு துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அதுமட்டுமின்றி ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவர் பதவியையும் இவர் வகித்து வந்தார்.
உர்ஜித் படேல் மட்டுமின்றி சுனில் லால்பாயை பிரிட்டானியாவின் தலைவராகவும், அதுல் என்பவரை மேலாண் இயக்குனராகவும் பிரிட்டானியா நியமனம் செய்துள்ளது. இவர்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு இந்த பொறுப்பில் நீடிப்பார்கள் என பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.31 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் பேஸ் வேல்யு 1, புக் வேல்யூ 163.64. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் கணிசமாக ஈவுத்தொகை வழங்கும் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு சுமார் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலைமையை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டில் 16,516 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது இதில் 2316 கோடி ரூபாய் லாபமாகும். பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளில் 50 சதவீதம் புரமோட்டர்களிடமும் வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 18 . 23 சதவீத பங்குகளும் உள்ளன. ஜூலை 4ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 5,422 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications