டெல்லி: நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவது என்பது "கேள்விக்குறி தான்" என்று கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன் மோடி அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கொண்டு செல்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் பொருளாதாரம் முழுவதும் இருண்ட மேகங்கள் கூடிவருவதால், இலக்கை நிலைநிறுத்துவது கடினம் என பலர் அதனை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2015-2016ம் நிதியாண்டில் 8.2 சதவீதத்திலிருந்த நிலையில் 2018 -2019 நிதியாண்டில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரம் சீராக சரிந்து வருவது தெரிகிறது.
6.1 ஆக குறைப்பு
2019-2020ம் நிதியாண்டின் முதல் காலாண்டின் வளர்ச்சி ஆறு ஆண்டு குறைவான அளவாக அதாவது 5 சதவீதமாக சரிந்துள்ளது. இருப்பினும் இரண்டாவது காலாண்டிற்கான சிறந்த கணிப்பு என்பது இப்போது 4.3 சதவீதமாகவேஉள்ளது. ரிசர்வ் வங்கி கூட அதன் வளர்ச்சி முழு ஆண்டு கணிப்பை அக்டோபர் கொள்கை மதிப்பாய்வில் 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
கேள்விக்குறி
இந்த சூழலில் ஐபிஎஸ்-ஐசிஎப்ஏஐ பிசினஸ் ஸ்கூல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், "இன்று நமது பொருளாதாரம் சுமார் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவது பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நிலையை அடைய தேவையான வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதத்திற்கு மேல் ஆகும். எனவே 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டுவது என்பது கேள்விக்குறி தான்.
வளர்ச்சி விகிதம்
இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதத்தில் பெரும் சரிவினை சந்தித்துள்ளது, இந்த ஆண்டு 6 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியாகவே இருக்கும், அடுத்த ஆண்டு இது சுமார் 7 சதவீதமாக இருக்கலாம். அதன் பிறகு பொருளாதாரம் உயரக்கூடும்,
வளர்ந்த நாடு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குக்கு நாம் மாறினால், நமது தனிநபர் வருமானம் தற்போதைய 1,800 அமெரிக்க டாலரிலிருந்து 3,600 அமெரிக்க டாலர்களாக உயரும், மேலும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற அடைப்புக்குறிக்குள் நம்மை விட்டுச்செல்லும்.
12 ஆயிரம் டாலர்
"ஒரு வளர்ந்த நாட்டின் வரையறை என்பது அந்த நாட்டின் ஆண்டு தனிநபர் வருமானம் 12,000 அமெரிக்க டாலர்கள்( ரூ.8லட்சத்து 61 ஆயிரம்). நாம் ஆண்டுக்கு 9 சதவீதமாக வளர்ந்தால் அந்த நிலையை அடைய 22 ஆண்டுகள் ஆகும்" இவ்வாறு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.


Click it and Unblock the Notifications