சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது . இந்த சூழலில் அண்மையில் தேர்தல் ஆணையம் சார்பாக தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது . மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஸ்ஐஆர் பணிகளின் போது இறந்தவர்களின் பெயர்கள், இரட்டை பதிவு, சரியான முகவரி இல்லாமல் இருந்தது என பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருக்கிறது . ஆனால் பலரும் தாங்கள் முறையான ஆவணங்கள் அனைத்தும் கொடுத்தும் கூட தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் நீக்கி இருக்கின்றனர் என கூறுகின்றனர்.

இறந்தவர்களின் பெயர்கள் கூட இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் புகார் கூறுவதை காண முடிகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் விட்டுப் போனவர்கள் அல்லது பெயர் நீக்கப்பட்டவர்கள் , வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்பவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .

தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்கு சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி புதிய வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விரும்பக் கூடிய நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருந்தால் படிவம் 6-ஐ பெற்று இந்த முகாமில் சமர்ப்பிக்க வேண்டும் .
முகவரி மாற்றம் வாக்காளர் விவரங்களை திருத்த வேண்டும் , புகைப்பட அடையாளம் மாற்றம் என்பன உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் படிவம் 8ஐ பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து காத்திருப்பதற்கு மாற்றாக இந்த முகாம்களுக்கு சென்றால் ஒரே நாளில் வேலையை முடித்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம் பெற்று இருக்கிறதோ அவர்களால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் . எனவே பொதுமக்கள் இந்த விடுமுறை கொண்டாட்டத்தின் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதை மறந்துவிடாமல் முடித்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications