சென்னை: இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸ்கான் கடந்த சில வருடங்களாகவே திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், இதை மறுத்தும், வேலையாட்கள் சேர்ப்பில் பல மாற்றங்கள் செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த நிலையை அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பாக்ஸ்கான் பெண் ஊழியர்களைத் தலைமைப் பதவிகளுக்கு, குறிப்பாக டிசைன் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது என்று கூறியுள்ளது. பாக்ஸ்கான் தனது பெரும்பாலான உற்பத்தியைத் தமிழ்நாட்டில் வைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் பணியமர்த்துதல் கொள்கையை எதிராக சில குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு உயர் பதவியில் அமர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு, பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் உயர் கல்வி பெற்றவர்கள் மற்றும் நிறுவனம் அவர்களை அதிக சவாலான மற்றும் அதிக வாய்ப்புகளை அளிக்கும் பணிகளுக்கு உயர்த்துவதற்கு ஆர்வமாக உள்ளது என்று PTI தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாக்ஸ்கான் சுமார் 48,000 பேரை பணியமர்த்தியுள்ளது. இதில் 70 சதவீதம் பெண்கள் உள்ளனர். இந்த பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை புதிய பணியாளர்கள் மற்றும் அவர்களில் 25 சதவீதம் திருமணமாகி உள்ளனர். இந்த பணியாளர்களை ஆதரிக்க, தமிழ்நாடு அரசு இந்நிறுவனத்திற்காகச் சமீபத்தில் சென்னை அருகே பெண்கள் மட்டுமே வசிக்கும் தங்கும் வசதிகள் கொண்ட வளாகத்தைத் திறந்தது. இதில் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைத் தங்க வைக்க முடியும்.
பாக்ஸ்கான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த தற்போது கர்நாடகாவில் சீனாவிற்கு வெளியே இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி ஆலையை ரூ.25,000 கோடி முதலீட்டில் அமைத்து வருகிறது. இந்த புதிய ஆலை 40,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது விலையுயர்ந்த ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் தமிழ்நாட்டில் அதன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாட்டின் மூலம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை சர்வதேச அளவில் அறிமுகமானதும் உடனடியாக இந்தியாவிலும் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு பாக்ஸ்கான் இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்பை (BESS) உருவாக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு தெரிவித்துள்ளார். யங் லியு ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் தொழிற்சாலைக்கு அருகில் தமிழ்நாடு அரசு கட்டிக்கொடுத்த மாபெரும் விடுதி வசதியின் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications