உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் சீனாவில் இருந்து பெரிய அளவிலான உற்பத்தி பணிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டுகளுக்கு கார்களை தயாரித்து வழங்கும் திட்டத்தை புதிதாக கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் அடுத்த வருடத்திற்குள் இந்தியாவில் அதன் மூதலீட்டையும், ஊழியர்கள் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்க திட்டமிட்டு உள்ளதாக பாக்ஸ்கான் குழுமத்தின் இந்திய பிரதிநிதியான வி லீ தனது லின்கிடுஇன் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு 73வது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த வி லீ, பாக்ஸ்கான் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையும், அன்னிய நேரடி முதலீடும், வர்த்தக அளவீட்டையும் இந்தியாவில் அடுத்த வருடத்திற்குள் இரட்டிப்பாக்க உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் வீ லீ இந்த முதலீடு எந்த மாநிலத்தில் வரும், எந்த துறையில் முதலீடு செய்யப்பட உள்ளது போன்ற முக்கியமான விஷயங்களை வெளியிடவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் பல மாநிலங்களில் தொழிற்சாலைகளை கட்டி வரும் பணிகளை செய்து வந்தாலும், முழுமையாக இயங்கி வருவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் மட்டுமே இதுவரையில் 40000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இத்தொழிற்சாலையில் ஐபோன் முதல் பல முன்னணி பிராண்டுகளுக்கு ஸ்மார்ட்போன் முதல் பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து வருகிறது.
பாக்ஸ்கான் தற்போது தமிழ்நாட்டில் அதன் தொழிற்சாலை பணிகளை விரிவாக்கம் செய்து வருவதோடு கர்நாடகா, தெலுங்கான, ஆந்திர மாநிலத்திலும் பல திட்டங்களுக்காக தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் அடுத்த முக்கியமான திட்டம் என்னவென்றால் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தான்.


Click it and Unblock the Notifications