சென்னை: செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு, அதன் முக்கிய உற்பத்தி பார்ட்னரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதிகப்படியான ஊழியர்களை உற்பத்தி பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஐபோன் 16 சீரிஸ் போன்களுக்கு அதிக தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய உற்பத்தி தளமாக இருப்பது தமிழ்நாடு தான், ஆனால் தமிழ்நாட்டில் புதிய ஐபோன்கள் அறிமுகத்திற்கு முன்பு தயாரிக்கப்படுவது கிடையாது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள் அனைத்தும் சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது.

சீனாவின் Zhengzhou நகரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கக் கூடுதலாக 50,000 தொழிலாளர்களை நியமித்துள்ளதாக பிசினஸ் கொரியா செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாத மத்தியில் ஐபோன் 16 வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஃபாக்ஸ்கான் மேற்கொண்டு வருகிறது.
பாக்ஸ்கான் புதிய தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக அடிப்படை சம்பளம் மற்றும் போனஸை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகளவில் 80 சதவீத ஐபோன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் நடைபெறுவதால், இது ஐபோன் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
சீனாவில் ஐபோன் 16 உற்பத்தி ஜூன் மாதமே தொடங்கியுள்ளதாகவும், ஜூலை மாதத்தில் இதன் உற்பத்தி அளவு முக்கிய கட்டத்தை எட்டி அதிகரித்துள்ளதாகவும் பல செய்திகள் தெரிவித்தன. இந்த ஆண்டு 9 கோடி ஐபோன் 16 மாடல்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐபோன் 16-ல் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இடம்பெற உள்ளதால், அதற்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிகமானோர் புதிய ஐபோன் மாடல்களை வாங்க வாய்ப்புள்ளதால், உற்பத்தியை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய திரை, வேகமான பிராசசர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். ஐபோனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை முக்கிய அம்சமாக ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications