தைவான் நாட்டைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனமான "Foxconn", இந்தியாவில் தனது செயல்பாடுகளை சிறப்பாக விரிவுபடுத்தும் நோக்கில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) சர்வர்களை தயாரிக்க உள்ளது. இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உற்பத்தி செய்வதற்காகவே பெரிதும் அறியப்பட்ட Foxconn நிறுவனம், தற்போது தனது உற்பத்தி திறனை பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, Foxconn நிறுவனம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) சர்வர்களை தயாரிக்கவுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தி நிலையங்களைப் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

AI மாடல்களைப் பயிற்றுவிப்பதற்கும் இயக்குவதற்கும் மிகவும் வேகமாக இயங்கும் சர்வர்கள் தேவை. இவற்றையே AI சர்வர்கள் (AI Servers) என்று அழைக்கிறோம். அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் NVIDIA போன்ற பெரிய நிறுவனங்களுக்காக ஏற்கனவே AI சர்வர்களை தயாரித்து வரும் Foxconn, இந்த நடவடிக்கையை தங்களின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய திட்டமாகக் கருதுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும், இந்த AI சர்வர்கள் Foxconn-இன் இயல்பான முன்னேற்றமாக தான் தெரிகிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகளாவிய AI சர்வர்கள் சந்தையில் அதன் பங்கு கடந்த ஆண்டு 30% ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 40% ஆக அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. Foxconn-னின் தலைமை நிர்வாக அதிகாரி young liu , தைபேயில் நடந்த நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில், AI சர்வர்கள் விரைவில் நிறுவனத்தின் அடுத்த டிரில்லியன் டாலர் வருவாயை தரக்கூடிய தயாரிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் Foxconn மின்சார வாகன (EV) உதிரிபாகங்களையும் தயாரிக்க உள்ளது. இதுவும் அந்நிறுவனத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும் மொபைல் போன் உற்பத்தியை விட இதில் அதிக லாபம் கிடைக்கிறது என்றும் கருதுகின்றனர்.
Foxconn நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது முதலீடுகளை தீவிரமாக அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில், Foxconn ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க சுமார் ரூ. 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது. மேலும், பெங்களூருக்கு வெளியே ஒரு புதிய தொழிற்சாலையும் கட்டப்பட்டு வருகிறது. அதில் முதன்மையாக ஐபோன் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் உற்பத்தியை மட்டும் நம்பி இருப்பதைக் குறைத்து, AI சர்வர்கள் மற்றும் அதிக லாபம் தரும் பிற பொருட்கள் தயாரிப்பில் பன்முகப்படுத்திக் கொள்வது Foxconn நிறுவனத்தின் புதுமையான யுக்தி என்று கூறப்படுகிறது. மற்றும் மின்சார வாகன சந்தைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இது உதவும். இந்தியாவில் ,முதலீடு செய்வதன் காரணமாக, Foxconn நிறுவனம் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications