தைவான் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான்-ன் இந்திய கிளை நிறுவனமான FII தமிழகத்தில் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்து உதிரிபாகங்களுக்கான தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று பாக்ஸ்கான் சீனாவின் செக்யூரிட்டீஸ் டைம்ஸ்-க்கு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த செய்தி இன்று காலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. பாக்ஸ்கான்-க்கு இரு கிளை நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகிறது, FII எனப்படும் Foxconn Industrial Internet மற்றும் Hon Hai Technology Group.

தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை பாக்ஸ்கான் நிறுவனத்தின் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலையில் உதிரிபாகங்களுக்கான தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலை அமைத்து சுமார் 6,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது என அறிவித்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் டிவிட்டரில் பாக்ஸ்கான் கிளை நிறுவனமான Hon Hai Technology Group முதலீட்டை உறுதி செய்யும் வகையில் பதிவிட்டு உள்ளனர். இதன் மூலம் Hon Hai Technology நிறுவனம் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது, இதை நேற்றைய பதவிலேயே தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சீனாவின் செக்யூரிட்டீஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு FII "நாங்கள் எந்த முதலீட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் நிறுவனம் இதேபோன்ற "வதந்திகளை" தாங்கள் மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த முதலீட்டுக்கும் FII நிறுவனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பது சரி தான், காரணம் முதலீடு செய்வது Hon Hai Technology நிறுவனம்.
இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் உதிரிபாகங்கள் தொழிற்சாலை அமைப்பதும் உறுதி, 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் உறுதி.
இதேவேளையில் ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கர்நாடகா மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீல், ஐடி/பிடி அமைச்சர் பிரியங்கா கார்கே மற்றும் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முக்கியமான கலந்துரையாடல் நடந்துள்ளது என நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மற்றும் தும்கூர் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையை கட்டமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது. இதில் குறிப்பாக தும்கூரில் ஐபோன்-க்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
பாக்ஸ்கான் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications