சென்னை: ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய ஃபாக்ஸ் கான் நிறுவனம் தன்னுடைய தமிழ்நாட்டு ஆலையில் கூடலாக 12, 800 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஃபாக்ஸ் கான் நிறுவனம் தைவான் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையில் ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில் ஃபாக்ஸ் கான் நிறுவனம் தன்னுடைய தமிழ்நாட்டு ஆலையில் உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டமிட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஃபாக்ஸ் கான் நிறுவனம் தமிழ்நாட்டு ஆலையில் கூடுதலாக 12,800 கோடி முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஃபாக்ஸ் கான் இந்தியா நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆவணத்தில் தங்களுடைய சிங்கப்பூரை சேர்ந்த துணை நிறுவனத்தின் வழியாக இந்த முதலீட்டை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்திக்கு பெரும்பாலும் சீனாவை தான் சார்ந்திருந்தது.
ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிக்கடி வர்த்தக மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால் தன்னுடைய சீனாவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்த ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவுக்கு மாற்றாக மற்ற நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படித்தான் ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ் கான் மூலம் இந்தியாவில் தமிழ்நாடு ஆலையிலிருந்து ஐபோன்களை உற்பத்தி செய்து பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ் கான் மட்டும் இல்லாமல் டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தி செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் அண்மையில் ஜூன் மாத காலாண்டுக்காக தங்களுக்கு தேவைப்படும் பெரும்பாலும் போன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையின் தான் தமிழ்நாட்டு ஆலையில் கூடுதலாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 2025 ஆம் நிதி ஆண்டில் ஃபாக்ஸ் கான் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்ததன் மூலம் அதற்கு கிடைத்த வருவாய் 1.7 லட்சம் கோடி என இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 3.1 மில்லியன் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்யும் ஐபோன்களில் 15 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இந்த நிதியாண்டில் 6 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications