உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பாளரும், அமெரிக்காவின் Apple நிறுவனத்தின் முக்கிய சப்ளையர் நிறுவனமான தைவான் நாட்டின் Foxconn தெலுங்கானாவில் சுமார் 400 மில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
தைவான் நாட்டின் பாக்ஸ்கான் மே 2023 இல் 500 மில்லியன் டாலர் தொகையை ஏற்கனவே முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 400 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. பாக்ஸ்கான் தனது ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றவாறு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா-வில் அடுத்தடுத்து முதலீடு செய்து வருகிறது.

தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நேரடியாக முதலீடு செய்யாவிட்டாலும், அதன் கிளை நிறுவனங்கள் வாயிலாக தொடர்ந்து முதலீடு செய்ய முக்கிய காரணம் இனி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக சீனா-வை நம்பியிருக்க கூடாது என்ற முக்கிய ஆப்பிள் நிறுவன உத்தரவு தான்.
இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள 400 மில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக தெலுங்கானாவில் ஆப்பிள் AirPods மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைத் தயாரிக்கும் ஒரு உற்பத்தி தளத்தை அமைக்கப் பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதியான வி லீ, தெலுங்கானாவில் நிறுவனம் "மிக வேகமாக நகர்கிறது" என்று லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு இந்த முதலீட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையில் FIH இந்திய கிளை நிறுவனத்திற்கு 400 மில்லியன் டாலர் நிதியை உட்செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் இப்புதிய 400 மில்லியன் டாலர் முதலீடு தெலுங்கானாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறைக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்க தெலுங்கானா அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
Foxconn இன் இப்புதிய 400 மில்லியன் டாலர் முதலீடு தெலுங்கானாவில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய ஆப்பிள் AirPods தொழிற்சாலையும், ஆப்பிள் ஏற்கனவே தொழிற்சாலை அமைப்பதாக அறிவித்து அடிக்கல் நாட்டியிருந்த Kongara Kalan பகுதியிலேயே அமைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications