சென்னை: தைவான் நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்த தயாரிப்பாளரான பாக்ஸ்கானின் துணை நிறுவனமான பிரிவான யுசான் டெக்னாலஜி இந்தியா (Yuzhan Technology), தமிழ்நாட்டில் ரூ.13,180 கோடி முதலீடு செய்து ஐபோனுக்கான டிஸ்ப்ளே மாடியூல்-ஐ தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்குத் தமிழ்நாடு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டில் 14,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகச் செப்டம்பர் மாதமே ஒரு தகவல் வெளியானது, அதில் பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களை தயாரிக்கும் யூனிட்-ஐ அமைக்க சுமார் $1 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இந்தியாவில் ஆப்பிள் பிராண்டுக்கு இத்தகைய சேவை செய்யும் முதல் தொழிற்சாலையாக இது இருக்கிறது. தற்போது பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்கிறது.
பாக்ஸ்கான், சென்னை அருகே உள்ள தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ESR ஒரகடம் தொழில்துறை மற்றும் தளவாட பூங்காவில் சுமார் 500,000 சதுர அடி நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த இடத்தில் இப்புதிய தொழிற்சாலை அமைக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சீனாவில் அசம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்து தான் தற்போது இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த தொழிற்சாலை மூலம் டிஸ்பிளே மாடியூல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருவது குறையும்.
இதேபோல் பாக்ஸ்கான் தயாரிக்கும் டிஸ்பிளே மாடியூல்-ஐ பாக்ஸ்கான் மட்டுமே பயன்படுத்தாமல் பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிற ஒப்பந்த தயாரிப்பாளர்களும் இந்த புதிய தொழிற்சாலையில் இருந்து மாடியூல்களை பெற்று ஐபோன் தயாரிப்பை வேகப்படுத்தக் கூடிய கட்டமைப்பை தான் தற்போது பாக்ஸ்கானின் Yuzhan Technology சென்னையில் உருவாக்கி வருகிறது.
பாக்ஸ்கானின் முதலீடு, செவ்வாய்க்கிழமை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 13 பிற திட்டங்களில் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க முதலீடு, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உற்பத்தி மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை தொடர்ந்து நிரூபணம் செய்கிறது.


Click it and Unblock the Notifications