சென்னை: தைவானைசேர்ந்த முன்னணி மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் 16 ப்ரோ மாடல்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் 267 கோடி ரூபாய்க்கான உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய்து இருக்கிறது. இந்த உபகரணங்கள் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைக்கு கொண்டுவரப்பட்டு ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் போன்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட உள்ளன.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் இது தொடர்பாக ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தங்களுடைய துணை நிறுவனமான பாக்ஸ் கான் ஹோன் ஹை டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்களை உற்பத்தி செய்வதற்காக 31.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்கள் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தது. நவம்பர் மாதத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும் எனக் கூறியிருந்தது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த போன்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
தற்போது ஐபோன் 16ஐ விட குறைந்த விலையில் ஐபோன் ப்ரோ சீரிஸ் மாடல் போன்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இந்த ஃபோன்களுக்கான இறக்குமதி வரியை ஆப்பிள் நிறுவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதால் இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ சிரிஸ் மாடல்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
ஐபோன் 16 ப்ரோ போன் 1,19,990 ரூபாய்க்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன் 1,44,900 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.இந்த இரண்டு மாடல்களுமே 6 . 3 அங்குலம் மற்றும் 6.9 அங்குல டிஸ்ப்ளே அளவில் கிடைக்கின்றன. இவை 128 ஜிபி, 256 ஜிபி, 512ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் கிடைக்கின்றன.
Written by: Devika


Click it and Unblock the Notifications