சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஐபோன் மற்றும் அதன் பாகங்களின் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் சீனாவை தான் சார்ந்திருந்தது. ஆனால் அடிக்கடி சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்படும் மோதல்கள் ஐபோன் உற்பத்தி மற்றும் இறக்குமதியில் பிரச்சினையை ஏற்படுத்தியது.
ஐபோன் உற்பத்தி மையம் இந்தியா: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் பிற சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவிற்கு படிப்படியாக மாற்றி வருகிறது. இந்தியா ஆப்பிள் நிறுவன சாதனங்களின் பிரதான உற்பத்தி மையமாக மாறும் என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றன.

ஃபாக்ஸ்கான் நிறுவனம்: டாடா நிறுவனம் ஓசூரிலும் ஃபாக்ஸ் கான் நிறுவனம் சென்னையிலும் ஆலை அமைத்துள்ளன. இதில் ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் ஒருங்கிணைப்பு ஆலையை செயல்படுத்தி வருகிறது. அதாவது பாகங்களை கொண்டு வந்து போனாக ஒருங்கிணைந்து ஏற்றுமதி செய்கிறது. டாடா நிறுவனம் ஐபோன்களுக்கான enclosure எனப்படும் உறைகளை தயாரித்து வழங்குகிறது. இந்த சூழலில் ஃபாக்ஸ் கான் நிறுவனம் மேலும் ஒரு ஐபோன் ஆலையை அமைக்க இருக்கிறதாம்.
ஓரகடத்தில் புதிய ஆலை: சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அல்லாமல் வேறு ஒரு பகுதியில் ஃபாக்ஸ்கான் ஐபோன் ஆலையை அமைக்க இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. சென்னை ஒரகடம் ஈஎஸ்ஆர் தொழில் பூங்காவில் இந்த புதிய ஐபோன் ஆலையை ஃபாக்ஸ்கான் அமைக்க இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் ஒருங்கிணைப்பு பணி நடக்கும் நிலையில் ஓரகடம் ஆலையில் ஐபோன் உறைகளை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறது.
சென்னையில் 2 ஆலைகள்: ஃபாக்ஸ்கான் சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் உற்பத்தி ஆலை அமைத்துள்ளது. ஐதராபாத் ஆலையில் ஐபாட் உற்பத்தி செய்கிறது. பெங்களூருவில் மிகப்பெரிய ஆலையை அமைத்து வருகிறது. ஐபோன் ஒருங்கிணைப்பு இல்லாமல் பாகங்கள் உற்பத்தியிலும் ஃபாக்ஸ்கான் களமிறங்குகிறது அதற்கு சென்னையை தேர்வு செய்துள்ளது.
ஓரகடத்தில் 2 ஆலைகள்: ஓரகடம் தொழில்பூங்காவில் ஐபோன் ஆலைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய டிஸ்ப்ளே மாட்யூல் ஒருங்கிணைப்பு ஆலையையும் இதே தொழில் பூங்காவில் நிறுவி வருகிறது. அந்த வகையில் ஓரகடம் ஆலையில் ஃபாக்ஸ்கான் இரண்டு ஆலைகளை செயல்படுத்த இருக்கிறது.
ரூ. 12,800 கோடி முதலீடு: ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்கும் போக்கை இந்தியாவில் செயல்படக்கூடிய தன்னுடைய ஐபோன் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருகிறது. ஃபாக்ஸ் கான் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 12,800 கோடி முதலீடு செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் ஐபோன் பாகங்களை உற்பத்தியை விரிவாக்கம் செய்வது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications