உலக அளவில் புகழ்பெற்ற ஸ்மார்ட் போன் பிராண்டாக ஆப்பிளின் ஐபோன் இருக்கிறது. தற்போது உலக அளவில் விநியோகம் செய்யப்படக்கூடிய பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் தமிழ்நாட்டில் தான் இந்த ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உற்பத்தி ஆலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி ஆலை ஸ்ரீபெரும்புதூர் ஆலை தான். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஐபோன் ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஃபாக்ஸ்கான் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஓசூரில் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்து ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் ஐபோன் உற்பத்தி பிரிவுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் ஃபாக்ஸ்கான் சென்னையிலேயே மற்றொரு பகுதியில் மிகப் பெரிய ஐபோன் ஆலையை அமைத்து வருகிறது.
சென்னையிலேயே 13,180 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஒரு ஆலையை கட்டமைத்து வருகிறது ஃபாக்ஸ்கான். ஒரகடம் ஈஎஸ்ஆர் தொழில் பூங்காவில் ஃபாக்ஸ்கானின் ஐபோன் உற்பத்தி ஆலை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிந்து ஆலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் ஐபோன்களுக்கு தேவையான டிஸ்ப்ளே மாட்யூல்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் டிஸ்ப்ளே மாட்யூல்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கிறது. அதுவும் சென்னையில் அமைவதுதான் நமக்கு கூடுதல் பெருமை. இந்த ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது கிட்டத்தட்ட 14,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஐபோன் உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழ்நாட்டிலேயே கிடைக்கும் வகையிலான மிகப்பெரிய ஒரு விநியோக சங்கிலியையே தமிழ்நாடு உருவாக்க இருக்கிறது.
இந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஐபோன் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு இன்னும் அதிகரிக்கும். துறைமுகம் , விமான நிலையம் என ஏற்றுமதி, இறக்குமதிக்கான அனைத்து வசதிகளும் கொண்டிருப்பதால் வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான மையமாக சென்னை மாறி வருகிறது.
ஏற்கனவே ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூர் ஆலைக்கு கிடைத்த வெற்றியால் தான் ஃபாக்ஸ்கான் ஓரகடத்தில் மற்றொரு ஆலையை அமைக்கிறது. இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதோடு மட்டுமில்லாமல் ஐபோன் உற்பத்திக்கான அனைத்து பாகங்களும் கிடைக்கும் நகரமாகவும் சென்னை மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications