பிரபல பாக்ஸ்கான் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பது தெரியவந்துள்ளது. என்விடியா நிறுவனத்திற்கு தேவையான செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான சிப்களை மட்டுமே தயாரிப்பதற்காக பாக்ஸ்கான் நிறுவனம் மெக்சிகோவில் மிகப்பெரிய ஆலையை நிறுவுகிறது.
சர்வதேச அளவில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது பாக்ஸ்கான். இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரித்து ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் என்விடியா நிறுவனத்திற்கு தேவையான ஜிபி200 வகை சிப்கள் மற்றும் சர்வர்களை பாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது.
இதற்காக உலகிலேயே மிகப்பெரிய சிப் தயாரிப்பு ஆலையை பாக்ஸ்கான் நிறுவனம் மெக்சிகோவில் அமைக்க இருக்கிறது. தைவானில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இந்த நிறுவனத்தின் மூத்த தலைவர் பெஞ்சமின் திங் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
பாக்ஸ்கான் மற்றும் என்விடியா இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் நடப்பு ஆண்டில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் மிக முக்கியமான மைல்கல் என கூறியுள்ளார். இந்த பூமிக்கு தேவையான ஜிபி200 வகை சிப்களை தயாரிப்பதற்கான மிகப்பெரிய ஆலையை நாம் நிறுவ இருக்கிறோம் என பெஞ்சமின் அப்போது பெருமைப்பட தெரிவித்தார்.
தைவான் நாட்டை சேர்ந்தது தான் பாக்ஸ்கான் நிறுவனம். இது ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் பாகங்களை ஒருங்கிணைத்து போனாக மாற்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலும் கூட பாக்ஸ்கான் நிறுவனம் ஆலை அமைத்து ஐபோன்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் செல்போன் தாண்டி தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கான சர்வர்கள் சார்ந்த சந்தையிலும் கால் பதிக்க தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு புரட்சியில் முழு வீச்சில் செயல்படுவதற்கு பாக்ஸ்கான் நிறுவனம் தயாராகி வருவதாக அதன் தலைவர் யங் லியு தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கான வன்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக பாக்ஸ்கான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்ப நிறுவனமான சிலிக்கான் ஆட்டோ (SiliconAuto)வின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை பெங்களூருவில் அமைத்துள்ளது. இந்த மையம் இந்தியாவில் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் செமி கண்டக்டர் மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மெக்சிகோவிலும் சிப் தயாரிப்பு ஆலையை நிறுவுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications