சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனம், தற்போது பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் ஆலையை நிறுவ இருக்கிறது.
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் ஆலையை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு 200 ஏக்கர் நிலத்தை வழங்க முன் வந்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தை பொருத்தவரை தன்னுடைய முதல் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் ஆலையை தைவான் நாட்டில் அமைத்து வருகிறது. இரண்டாவது ஆலையை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு 200 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. பேட்டரி ஆலையை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் பாக்ஸ்கான் ஆலை அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
வட சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் என்ற இடத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி ஸ்டோரேஜ் ஆலை நிறுவ அரசு இடம் ஒதுக்கி தந்துள்ளது.
இந்த ஆலைக்காக தமிழ்நாடு அரசு சார்பாக பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில முக்கிய சலுகைகளும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட்போன் உற்பத்தியை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் ஆற்றல் மற்றும் டிஜிட்டல் சார்ந்த துறைகளிலும் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு பாக்ஸ்கான் திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் ஆலை அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தன்னுடைய மின்சார வாகன தொழிலுக்கு தேவையான பேட்டரிகளை பாக்ஸ்கான் நிறுவனம் இந்த ஆலையில் உற்பத்தி செய்யும் என சொல்லப்படுகிறது.
மேலும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரங்களை சேமித்து வைப்பதற்கு இந்த பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது.
தமிழ்நாடு அரசினை பொருத்தவரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பசுமை எரிசக்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அதன் பலனாக தான் தற்போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி ஆலை தமிழ்நாட்டில் அமைய இருக்கிறது. பாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்களுடைய ஆலையை நிறுவி ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications