தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில் முதலீடாக எதிர்பார்க்கப்பட்ட பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு விவகாரம் தான், தற்போது தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியா தலைவர் ராபர்ட் வூ, அக்டோபர் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதுடன், இதன் மூலம் 14,000 உயர்மட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பதிவிட்டிருந்தார். ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியானதுமே, பாக்ஸ்கான் நிறுவனம் உடனடியாக மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. "புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியா பிரதிநிதி ராபர்ட் வூ, முதலமைச்சர் அலுவலகத்துடன் நடத்திய சந்திப்பில், புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் நிறுவனம் தெளிவாகக் குறிப்பிட்டது.
அமைச்சரின் பொது அறிவிப்புக்கும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மறுப்புக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பது, இந்த ரூ.15,000 கோடி முதலீட்டின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்பியது. அரசின் அறிவிப்புக்கு நிறுவனம் உடனடியாக மறுப்புத் தெரிவித்தது, தமிழக அரசியல் களத்தில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியது.
இதுகுறித்து தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக சில மாதங்களுக்கு முன்பே உறுதி அளித்தது. ஆனால், பல மாநிலங்களும் இந்த முதலீட்டை ஈர்ப்பதற்காக தொடர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டு வலியுறுத்தி வந்ததால், இந்த முதலீட்டுத் தகவலை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று பாக்ஸ்கான் எங்களிடம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், இந்த முதலீடு குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன"
"தற்போது, அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரைச் சந்தித்த நிலையில், வழிகாட்டி நிறுவனம் தரப்பில், பாக்ஸ்கானின் ரூ.15,000 கோடி முதலீடு குறித்த தகவல் அமைச்சர் ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் தான் அமைச்சர் பொதுவெளியில் அறிவித்தார். ஆனால், முதலமைச்சர் சந்திப்பின்போது 'புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என்று பாக்ஸ்கான் தரப்பு மறுத்ததற்குக் காரணம், ரகசியத்தைப் பேணுவதற்காக இருக்கலாம். எனவே, அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது உறுதி" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்நிலையில் தான், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையில், "இன்றைய உலக அரசியல் சூழலில், ஒரு பெரிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமானது, அதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதை எல்லாம் அறியாமல், சிலர் சிறுபிள்ளைத்தனமான அறிக்கை வெளியிடுகின்றனர். இனியாவது அவர்கள் இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்து, 14,000 பேருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத, நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி" என அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய வர்த்தகச் சூழல் தெரியாமல், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தைக் கிளப்புபவர்களுக்குத் தன்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் முதலீடு உறுதி என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அவர் தனது அறிக்கையில் ஆணித்தரமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications