இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி துறை நிறுவனங்களை ஈர்ப்பதில் அனைத்து மாநிலங்களும் போட்டிப்போடும் வேளையில், தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனத்தை சென்னையில் மாபெரும் தொழிற்சாலையாக அமைத்து அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில் தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனது மாபெரும் தொழிற்சாலையில் முக்கிய விரிவாக்க பணிகளை செய்ய திட்டமிட்டு அதற்கான ஒப்புதலையும் வாங்க தமிழக முதல்வரை பாக்ஸ்கான் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்தனர்.

இந்த நிலையில் இன்று தைவான் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனமான Foxconn Industrial Internet (FII) சுமார் 194.45 மில்லியன் டாலர் முதலீட்டில் காஞ்சிபுரம் தொழிற்சாலையில் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களுக்கான தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசும் - பாக்ஸ்கான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் காஞ்சிபுரம் தொழிற்சாலையில் ஏற்கனவே 35000 பேர் பணியாற்றி வரும் வேளையில், இப்புதிய தொழிற்சாலையில் சுமார் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி திறன் பெரிய அளவில் உயர வாய்ப்புகள் உள்ளது.

இத்தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் வேளையில், இத்தொழிற்சாலைக்கு 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ள நிலையில், எதிர்காலத்திலும் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
பாக்ஸ்கான் சீனாவில் இருந்து தனது உற்பத்தி தளத்தை மொத்தமாக திரும்ப பெற்ற நிலையில், இந்தியா முக்கிய உற்பத்தி தளமாக மாறியுள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியாவில் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாக்ஸ்கான் இந்தியாவில் தனது மொத்த சப்ளை செயின்-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.



Click it and Unblock the Notifications