விலையுயர்ந்த அல்லது அதிக விலையுள்ள பங்குகளை சராசரி சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டு வரம்பிற்குள் கொண்டு வர முயற்சியை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி கையில் எடுத்துள்ளது.
பொதுவாக விலை உயர்ந்த பங்குகளை சாமானிய ரீடைல் முதலீட்டாளர்களால் வாங்க முடியாது, ஆனால் இந்த நிறுவனத்திலும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. ஆனால் இது எப்படி சாத்தியம்..?

நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தால் ஒரு ஐடியா இப்போது வந்திருக்கும், உதாரணமாக பிட்காயின் 20000 , 30000, 40000 டாலர்களில் வர்த்தகம் செய்யப்பட்ட போது மக்கள் இதில் 1000, 500 என சிறிய தொகையை முதலீடு செய்து பிட்காயினில் ஒரு சிறிய பகுதியை வாங்குவது வழக்கம்
இதேபோன்ற முறையை இந்தியாவில் இருக்கும் அதிக விலையுள்ள பங்குகளை சராசரி சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டு வரம்பிற்குள் கொண்டு வர பின்னமாக பங்குகள் விற்க அதாவது ஒரு பங்கில் ஒரு பகுதியை மட்டும் fractional shares ஆக வர்த்தகம் செய்யும் முறை அறிமுகப்படுத்த முடியுமா என்று செபி யோசித்து வருகிறது.
Fractional trading என்பது ஒரு முதலீட்டாளர் ஒரு பங்கின் ஒரு பகுதியை வாங்கக்கூடிய ஒரு கட்டமைப்பை குறிக்கிறது. இதை இன்னும் எளிதாக புரிந்தக்கொள்ள வேண்டுமெனில் உதாரணமாக, MRF நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை தற்போது கிட்டத்தட்ட 1.09 லட்சம் ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய டயர் நிறுவனமாக இருக்கும் எம்ஆர்எப் பங்குகளை வாங்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் இந்த நிறுவன பங்குகளை வாங்க வேண்டுமெனில் ஒரு பங்கிற்கு 100000 ரூபாய் வேண்டும். இது 99 சதவீத ரீடைல் முதலீட்டாளர்களால் சாத்தியம் இல்லாத ஓன்று.
இந்த நிலையில் செபி பகுதி பங்குகளை வர்த்தகம் செய்யவும், உரிமை கோரவும் அனுமதித்தால், ஒருவர் 25,000 ரூபாய் முதலீடு செய்து 0.25 சதவீதம் அதாவது ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கைப் பெறலாம் அல்லது பங்கின் சிறிய பகுதிகளை பெறலாம்.
இந்தியாவில் பல நிறுவனங்களின் பங்கு விலைகள் 20,000 ரூபாய்க்கு மேல் உள்ளன. பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 39,612, ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா பங்குகள் 39,308 ரூபாய், ஸ்ரீ சிமென்ட் பங்கு விலை 25,681 ரூபாய், அபோட் இந்தியா பங்கு விலை 22,800 ரூபாய், நெஸ்லே இந்தியா பங்கு விலை 21,922 ரூபாய். இப்படி பல பங்குகள் அதிகப்படியான விலையில் உள்ளது.
அமெரிக்க சந்தைகளில் பகுதி உரிமை பங்குகள் வர்த்தகம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் பல இந்திய முதலீட்டாளர்கள் பிரபலமான நிறுவனங்களான Apple, Meta மற்றும் Alphabet போன்றவற்றின் பகுதி பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான் செபி அமைப்பின் தலைவர் மதாபி பூரி புச் மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் கூட்டத்தில் பேசுகையில், இந்த சேவையை இந்தியாவில் கொண்டு வர மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் அதற்கு செபி சட்டம் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திலும் மாற்றங்கள் தேவை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications