அமெரிக்கா: இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரே நிமிடத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்வதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் உங்களின் எலக்ட்ரிக் வாகனங்களை கூட 10 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைகழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவில் பேராசிரியராக இருப்பவர் அங்கூர் குப்தா, இவரது புதுமையான கண்டுபிடிப்பு தான் நிமிடத்தில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம். இவரது குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்கள் நடத்திய ஆய்வில், அயனிகள் எனப்படும் சிறிய மின்னூட்டப்பட்ட துகள்கள் எப்படி சிறிய துளைகளின் சிக்கலான நெட்வொர்க் வழியாக பாய்கின்றன என்பதை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சூப்பர் கெபாசிட்டர்கள் போன்ற திறமையான ஆற்றல் சேமிப்பு சாதனங்களை உருவாக்க முடியும் என அங்கூர் குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சூப்பர் கெபாசிட்டர் எனப்படும் இந்த ஆற்றல் சேமிப்பு சாதனம் மூலம், மின்சார வாகனங்கள் , மின்னணு சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்து விடலாம் என குப்தா கூறியுள்ளார்.சூப்பர் கெபாசிட்டர்கள் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யக்கூடியவை மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்டவை என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு ஆட்டோமொபைல்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களில் ஆற்றலை சேமிப்பதற்கு மட்டுமல்ல, பவர் கிரிட்களுக்கும் பொருந்தும், இதன் மூலம் மின்சாரம் வீணாவதும் தவிர்க்கப்படும் என கூறியுள்ளார். சூப்பர் கெபாசிட்டர்கள் என்பது பெரிய அளவில் யாருமே ஆய்வு செய்யாத துறை. எனவே தன்னுடைய குழுவினர் இதில் ஆர்வம் காட்டி இந்த நுட்பத்தை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உலகமே மின்சார சாதனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லேப்டாப்கள், செல்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தான் போகிறது. அதே போல பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டுக்கு மக்கள் மாறி வருகின்றனர்.
எனவே மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி சார்ஜ் நிலையங்கள் 10 நிமிடங்களில் பேட்டரியை சார்ஜ் செய்யும் என்றால் எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம் இது என்பதில் ஐயமில்லை. இதனை இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் கண்டுபிடித்திருப்பது இந்தியர்களாகிய நமக்கெல்லாம் பெருமை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications