இந்தியாவில் வரி ஏய்ப்பினை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்கிறார் என்ற சந்தேகம் வலுவாக எழும் போது வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நபரின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களுக்கே சென்று சோதனை நடத்துவார்கள்.
வருமான வரி சோதனை என்பது ஒரு நாளில் தொடங்கி பல நாட்களுக்கு கூட நடக்கும். அனைத்து ஆவணங்கள், வீட்டில் உள்ள பொருட்கள் அந்த நபரின் வருமான ஆதாரம் ஆகியவற்றை எல்லாம் ஆய்வு செய்வார்கள். வரி ஏய்ப்பு நடந்திருந்தால் அதற்காக அபராதம் விதித்து அந்த தொகையை கைபற்றுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஆன்லைன் வாயிலாகவே நடக்கிறது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வருமான வரி மசோதா 2025 -இன் படி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நம்முடைய வருமானம் மட்டுமில்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் தனிநபரின் சமூக வலைதள கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றையும் அணுகி ஆய்வு செய்யக்கூடிய அதிகாரத்தை பெற இருக்கிறார்கள் என இந்தியன் டெக் & இன்ஃபிரா என எக்ஸ் பக்கத்தில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.
சில செய்தி தளங்களும் கூட புதிய வருமான வரி மசோதாவின் படி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கான கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என கூறி இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அதாவது வருமான வரி தாக்கலின் போது பொய் கணக்கு தாக்கல் செய்து இருக்கிறார்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தால் உங்களுடைய வருமான விவரங்கள் மட்டுமில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சல், சமூக வலைதள கணக்குகள் , வங்கி கணக்கு விவரங்கள், டிஜிட்டல் வாலெட்டுகள், ஆன்லைன் டிரேடிங், இன்வெஸ்ட்மெண்ட் கணக்குகளை வருமான வரி அதிகாரிகளால் உங்களை அனுமதி இல்லாமலேயே இனி ஆய்வு செய்ய முடியும் .
இதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடிகளை தடுக்கவும் வரி ஏய்ப்புகளை குறைக்கவும் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து அறியவும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . எனவே உங்களுடைய வருமான வரியை நீங்கள் சரியான முறையில் தாக்கல் செய்ய வேண்டும் உங்களுடைய வருமானம் அல்லது சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை அதில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அதிகாரிகள் உங்களுடைய இமெயி,ல் சமூக வலைத்தள கணக்குகளின் மூலம் என்னென்ன வரி ஏய்ப்பு செய்திருக்கிறீர்கள் என்பதை இனிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது தவறான தகவல் என அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் PIB fact check அமைப்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரி த்துறை உங்களின் சமூகவலைதள கணக்குகள், மின்னஞ்சல்களை எல்லாம் ஆய்வு செய்ய போகிறது என பரவும் செய்தியில் உண்மை இல்லை என கூறியுள்ளது.
அதாவது வருமான வரி சட்டம் 2025இன் பிரிவு 247 தேடல் மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பதற்காக சோதனை நடத்தப்படும் போது அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மட்டுமே அவரின் டிஜிட்டல் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். அனைவரிம் டிஜிட்டல் கணக்குகளையும் அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யாது அணுகாது என விளக்கம் தந்துள்ளது.
வழக்கமான தகவல் சேகரிப்பு ,சரிபார்ப்பு அல்லது ஆய்வு மதிப்பீட்டின் கீழ் உள்ள வழக்குகளுக்கு கூட இந்த அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்த முடியாது. கருப்பு பணம் மற்றும் பெரிய அளவிலான வரி ஏய்ப்பை குறி வைத்து தேடுதல் மற்றும் கணக்கெடுப்பு நடக்கும் போதும் மட்டுமே பயன்படுத்தப்படும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களை குறி வைக்காது என விளக்கம் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications