வேலைவாய்ப்பின்மைக்கு மத்தியில் பல இளைஞர்களுக்கு இருக்கும் கனவு என்ன தெரியுமா? ஒரு சொந்த வீடு, நல்ல வேலை, கைநிறைய சம்பளம் அவ்வளவுதான். ஆனால் அதற்கே பலர் திண்டாடி வருகின்றனர். ஏசியில் அமர்ந்து கொண்டு பார்ப்பதற்கு ஒருவேளை கிடைத்து விடாதா? என்று ஏங்கும் இளைஞர்கள் பலர். அவர்களுக்கு மத்தியில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிந்த சொகுசான வங்கி வேலையை விட்டுவிட்டு ஒருவர் இறால் வளர்ப்பை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? தற்போது ஒவ்வொரு ஆண்டும் கோடிகளில் வருமானம் பார்த்து வருகிறார்.
அசைவப் பிரியர்களுக்கு தினசரி ஒரு அசைவமாவது தட்டில் இருக்க வேண்டும். எதுவுமே இல்லாத பட்சத்தில் முட்டையாவது இருந்தால் தான் உணவு இறங்கும். அதிலும் குறிப்பாக இறால் பலருக்கும் பிடித்த அசைவ உணவு. இதைத்தான் பிசினஸ் ஆக மாற்றியுள்ளார் அஜய் என்ற இளைஞர்.
அஜய் குமார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2005-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக குருக்கிராமில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் அவருக்கோ வங்கி வேலையை விட சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் இருந்துள்ளது. பணவீக்க அதிகரிப்புக்கு மத்தியில் 9 டூ 5 ஜாப் செல்பவர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டினால் தான் குடும்பத்தை நடத்தும் சூழல் நிலவுகிறது. எனவே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எல்லோரையும் போல அஜைய்யும் நினைத்துள்ளார்.

இதனால் தனது சொந்த ஊரான ரோத்தக்கில் தன் குடும்பத்துடன் தங்கி ஏதேனும் சுய தொழிலை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்கு கண்டிப்பாக முயற்சியும், பயிற்சியும் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட அஜய், லாஹ்லி என்ற பகுதியில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் இறால் வளர்ப்பு பயிற்சியை பெற்றுள்ளார்.
பிறகு அஜய் 2015-ஆம் ஆண்டு வாக்கில் தங்களுடைய 2.5 ஏக்கர் நிலத்தில் இறால் பண்ணையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நினைத்தது போல பிசினஸ் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இருந்தாலும் அஜய் தன்னுடைய வைராக்கியத்தை கைவிடவில்லை. அறிவியல் அணுகுமுறையும் சொந்த முயற்சியும் கண்டிப்பாக வெற்றியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் ஓடிகொண்டே இருந்தார். சொந்த ஊரில், சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் தான் இன்று அவரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.
தற்போது அஜய் ஒவ்வொரு ஆண்டும் 150 டன்னுக்கும் அதிகமான இறால் உற்பத்தி செய்கிறார். 2.5 ஏக்கர் நிலத்தில் ஆரம்பித்த மீன் வளர்ப்பு மற்றும் இறால் பண்ணையை 60 ஏக்கருக்கும் அதிகமாக விரிவுபடுத்தியுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து பண்ணை நடத்தி வருகிறார். இறால் வளர்ப்பை குறிப்பிட்ட மாதத்தில் தான் செய்ய முடியும்.
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இறால் வளர்ப்பில் ஈடுபடுகிறார். அஜய் குமாரின் பண்ணையிலிருந்து வரும் இறால் மற்றும் மீன்கள் ஆந்திர பிரதேஷம், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற பல இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் சற்று பிஸி என்றே சொல்லலாம். இவ்விரு மாதங்களிலும் வியாபாரிகளே நேரடியாக லாரியை அனுப்பி அஜய்யின் பண்ணையிலிருந்து இறால்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நேரடி லாபம் கிடைக்கிறது.
இறால் மற்றும் மீன் வளர்ப்பின் மூலம் அஜய் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார். தாங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டாலோ முடங்கி போகாமல் பிற வழிகளையும் தேட வேண்டும். அவ்வப்போது மார்க்கெட்டில் எந்தெந்த விஷயத்திற்கு அதிக தேவை இருக்கிறது? என்பதையும் தெரிந்து கொண்டால் எப்பேற்பட்ட தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றி அடைய முடியும் என்பதற்கு அஜய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications