டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடியவர்கள் கண்டிப்பாக தனு ஜெயின் பற்றி அறிந்திருப்பார்கள். யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ,ஒரு அரசு அதிகாரியாக பணிகளை மேற்கொள்வது எப்படி, இந்த தேர்வுகளுக்கு எப்படி படிப்பது, நேர்காணல்களை எதிர்கொள்வது என சமூக வலைத்தளங்களில் ஒரு சமூக சேவையாகவே இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கானவர்களை அரசு பணிகள் நோக்கி ஈர்த்து வருகிறார் தனு ஜெயின்.
இந்தியாவில் அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களின் கனவு. குறிப்பாக மத்திய அரசாங்க பணி என்றால் அது ஒரு தனி கெத்து என்றே கூறலாம். ஆனால் அனைவராலும் அதில் வெற்றி பெற முடிவதில்லை. குறிப்பிட்ட சிலரே பல்வேறு சவால்களையும் கடந்து வந்து அந்த நிலைக்கு உயர்கிறார்கள். அப்படிப்பட்டவர் தான் தனு ஜெயின்.

ஒரு பல் மருத்துவராக இருந்த அவர் தற்போது சிவில் சர்வென்டாக மாறி நாட்டுக்கு சேவையாற்றி வருகிறார். அது மட்டுமல்ல சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு அரசாங்கப் பணிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
டிஆர்டிஓ-வில் துணை இயக்குனராக செயல்பட்டு வந்த இவர். ஏழரை ஆண்டுகள் சேவைக்கு பிறகு வேலையை விடுத்து முழுநேர யுபிஎஸ்சி பயிற்சியாளராக மாறி இருக்கிறார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டுமென்றால் அந்த தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் ,அதற்கு எப்படி படிக்க வேண்டும், எப்படி நேர்காணல்களுக்கு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.
டெல்லியை சேர்ந்த தனு ஜெயின், கேம்பிரிட்ஜ் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் மீரட்டில் உள்ள கல்லூரியில் பல் மருத்துவ படிப்பை முடித்த அவர் உடனடியாக யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு படிக்க தொடங்கினார்.
2012ஆம் ஆண்டு தனு ஜெயின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் முதலாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக மெயின் தேர்வையும் முடித்த தனு ஜெயின் 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு படை தலைமையகத்தில் அவருக்கு பணி கிடைத்தது.
சிவில் தேர்வில் இந்தியா ரேங்கில் 648 வது இடத்தை பிடித்தவர் தனு ஜெயின். அதுமட்டுமின்றி இவரது கணவரும் கூட ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு தன்னுடைய சமூக ஊடக பக்கங்கள் வழியாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். இவர் சொந்தமாக Tathastu ICS என்ற பயிற்சி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மாக் இண்டவியூக்களை செய்து காட்டுவது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுவது என இவரால் இன்னும் பலர் ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகி வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications