பெரிய சாதனைகளைப் படைக்க கல்வி தேவையில்லை என்பதை இதற்கு முன்னர் பலரும் நிரூபித்துள்ளனர். இதற்கு நிகில் காமத்தும் சிறந்த எடுத்துக்காட்டு. பெரிய பைனான்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான செரோதாவின் இணை நிறுவனரான இவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி இன்று பணக்காரர்களின் பட்டியலில் உள்ளார். தற்போது செரோதா நிறுவனம் ஆண்டுக்கு 2,094 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருகிறது.
நிகில் காமத்தின் கதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் போல இருக்கும். ஏனெனில் ஒரு கால் சென்டரில் மாதம் ரூ.8000 என சுமாராக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரு டீனேஜர் எப்படி இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆனார் தெரியுமா?

1986-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி கர்நாடகாவின் ஷிமோகாவில் பிறந்த நிகில் காமத்தின் ஆரம்பகால வாழ்க்கை சாதாரணமானதுதான். 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறிய காமத், தனது எதிர்காலம் குறித்து பலரிடமிருந்து சந்தேகங்களை எதிர்கொண்டார். ஆனாலும், அவரது உறுதி அசைக்க முடியாததாக இருந்தது. கால் சென்டரில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய காமத், தனது சம்பளத்தை வைத்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
2010-ஆம் ஆண்டில் நிகில் காமத் மற்றும் அவரது சகோதரர் நிதின் செரோதாவை நிறுவனர். இன்று இந்த நிறுவனம் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. மேலும் சந்தையில் ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் காரணமாக இந்த சகோதரர்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் படித்த பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
நிகில் காமத்தின் முயற்சிகள் அதோடு நிற்கவில்லை. 2020-ஆம் ஆண்டில், பூஜ்ஜியக் கட்டண மாதிரியில் இயங்கும், அதி-உயர்-நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சொத்து மேலாண்மை நிறுவனமான True Beacon-ஐ அவர் நிறுவினார். அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது இளம் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்
இதற்கு முன்பு நிகில் காமத் மாதம் ரூ.8,000 ஊதியத்திற்கு ஒரு கால் சென்டரில் பணியாற்றினார். அதுமட்டுமின்றி டிரேடிங் செய்து கொண்டிருந்தார். கால் சென்டரில் செய்த வேலை அவருக்கு வணிகத்தின் யதார்த்தங்களைப் பற்றிய மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொடுத்தது.
யதார்த்தத்தை தெரிந்து கொள்ள, ஒருவர் தங்கள் குடும்பத்தின் எல்லையிலிருந்து வெளிவர வேண்டும். நான் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கால் சென்டரில் பணிபுரிந்தேன், காலையில் டிரேடிங் செய்தேன். இதன் மூலம் நிறைய அறிவைப் பெற்றேன் என்று நிகில் காமத் கூறியுள்ளார்.
ஃபோர்ப்ஸின் நிறுவனத்தின் அறிக்கையின்படி, நிகில் காமத் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் இளைய பில்லியனர் ஆவார். இவருடைய நிகர மதிப்பு 3.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது சகோதரர் நிதின் மதிப்பு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications