இன்றைய சூழலில் படித்து முடித்த பல இளைஞர்கள் சுமாரான சம்பளத்தில் கார்ப்பரேட் வேலையில் பணிபுரிந்து கொண்டு, விலைவாசி உயர்வுக்கு மத்தியில் திண்டாடி வருகின்றனர். ஆனால் நன்கு படித்த ஒரு வட மாநில இளைஞர் தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கி இன்று லட்சங்களில் லாபம் பார்த்து வருகிறார். வெறும் 23 நாட்களில் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். அந்த இளைஞர் அப்படி என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது? என்பதை பார்ப்போம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் மௌரியா. இவர் ITI முடித்தவர். அகிலேஷ் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்வார் என பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயத்தை கையில் எடுத்துள்ளார். சிறு வயதிலிருந்து தனது தந்தையின் விவசாயத்தை பார்த்தே வளர்ந்திருக்கிறார். இவருக்கோ மண்ணின் மீதும், விவசாயத்தின் மீதும் தீராக் காதல்.
இதனால் படிப்பை முடித்துவிட்டு பிற ஊர்களில் வேலை தேடி அலையாமல் சொந்த ஊருக்கே திரும்பி அவர் கற்றுக் கொண்ட புதிய உத்திகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். வழக்கம் போல விவசாயத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை விடுத்து ஆர்கானிக் ஃபார்மிங் என்று சொல்லப்படுகிற இயற்கை விவசாயத்தை செய்ய நினைத்தார். இது தொடர்பாக ஒரு தோட்டக்கலைத் துறை அதிகாரியிடம் அகிலேஷ் ஆலோசனையும் பெற்றுள்ளார். அங்கு அவர் பெற்ற படிப்பினை தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

வழக்கமான பயிர்களை விட்டுவிட்டு சந்தையில் எந்த காய்கறிக்கு அதிக தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதை பயிரிடும்படி தோட்டக்கலை துறை அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படியே தங்களுடைய 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்ய தொடங்கினார் அகிலேஷ்.
புதிதாக விவசாயத்தில் இறங்குபவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஏற்கனவே பயிரிடப்படும் பாரம்பரிய பயிர்களை அதிகம் விளைவிப்பதுண்டு. ஆனால் அகிலேஷ் அப்படி செய்யவில்லை. சின்ஜெண்டா, க்ளாஸி அர்னோ, டெல்லி எஸ்ஐஆர் போன்ற அதிநவீன வெள்ளரி ரகங்களை தேர்ந்தெடுத்து பயிரிடத் தொடங்கியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வெள்ளரிக்காய் நாற்றுகளை நட்டு, அதற்கு சொட்டு நீர் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சியுள்ளார். பின்னர் மே மாத தொடக்கத்தில் இருந்து வெள்ளரிக்காய் விளைச்சளைத் தர ஆரம்பித்துள்ளது. இப்போது அவர் தோட்டத்திலிருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக 7 முதல் 8 குவிண்டால் வரை வெள்ளரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது. அதில் மே 1-ம் தேதி மட்டும் சுமார் 10 டன் வெள்ளரிக்காயை அறுவடை செய்துள்ளார்.
அதோடு 7 முதல் 8 நபர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளார். அகிலேஷ் இந்த நாற்றுகளை காப்பாற்ற சொட்டு நீர் பாசனம் மற்றும் பாத்திகள் அமைப்பதற்காக ரூ.30,000 வரை செலவு செய்துள்ளார். ஆனால் அறுவடை தொடங்கிய வெறும் 23 நாட்களிலேயே கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்த்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அகிலேஷ்ஷுக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கவில்லை. முதலில் 1 கிலோ வெள்ளரிக்காய் ரூ.14 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இப்போது ஒரு கிலோவின் விலை 20 ரூபாயை தொட்டுள்ளது.
எந்த ஒரு விஷயத்தையும் செய்தாலும் அதை தெளிவான திட்டமிடலுடன் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதற்கு அகிலேஷ் ஒரு சிறந்த உதாரணம். படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வீட்டிலேயே முடங்கி போகாமல் நம்மைச் சுற்றியுள்ள தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்தால், எந்த சூழலிலும் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு இந்த வட மாநில இளைஞரின் கதையே சாட்சி!


Click it and Unblock the Notifications