ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அரசுடன் பல்வேறு ஆலோசனைக்குப் பின்பு மும்பை பங்குச்சந்தை மார்ச் சரிவில் இருந்து மீண்ட காரணத்தால் முன்பு அறிவிக்கப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தைத் தனது 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
ஈபிஎப்ஓ அமைப்பின் இந்த முடிவிற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஈபிஎப்ஓ 6 கோடி பிஎப் வாடிக்கையாளர்கள் கணக்கில் வட்டி வருமானத்தைச் செலுத்தத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் ஜனவரி 1 முதல் பலர் தங்களது கணக்கில் பிஎப் வைப்பு நிதிக்கான வட்டி வருமானத்தைப் பெறத் துவங்கியுள்ளனர்.
ஈபிஎப்ஓ அமைப்பு
இதுக்குறித்து ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 8.5 சதவீத வட்டி வருமானத்தை பிஎப் கணக்காளர்களுக்குச் செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் கணக்காளர்களுக்கு வட்டி வருமானத்தை டெபாசிட் செய்யும் பணியைத் துவங்கியுள்ளோம்.
6 கோடி ஊழியர்கள்
மேலும் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெறும் ஊழியர்களும் முன்பு அறிவிக்கப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தைப் பெறுவார்கள் என தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்கவார் தெரிவித்துள்ளார்.
இதனால் 6 கோடி ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர்.
பங்கு விற்பனை
இந்த வருடம் முதல் முறையாகக் கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு, ஈபிஎப்ஓ அமைப்பு முதலீடு செய்துள்ள பங்குகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் கடன் சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் கிடைத்த 8.15 சதவீத வட்டி வருமானத்தை மட்டும் முதலில் ஈபிஎப்ஓ கணக்கில் செலுத்தவும், மீதமுள்ள 0.35 சதவீத வட்டி வருமானத்தை இழப்புகளைக் கணக்கிட்டுச் செலுத்துவதாகச் செப்டம்பர் மாதம் அறிவித்தது.
பங்குச்சந்தை வளர்ச்சி
இதற்கிடையே பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகச் சிறப்பான முதலீட்டைப் பெற்ற நிலையில் மத்திய அரசு ஈபிஎப்ஓ முதலீடு செய்துள்ள பங்குகளை விற்பனை செய்து முந்தை கணிப்பை விடவும் அதிகளவிலான லாபத்தைப் பெற்றது.
8.5 சதவீத வட்டி வருமானம்
இதன் காரணமாக மத்திய அரசு 6 கோடி பிஎப் வாடிக்கையாளர்களுக்கும் முன்பு அறிவிக்கப்பட்டதை போலவே 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தை முழுமையாகச் செலுத்தத் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications