உலகின் முன்னணி ஈ காமர்ஸ் தளமான அமேசான், அடுத்த ஆண்டு முதல் தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்தின் 5 நாட்களுக்கு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆன்டி ஜெஸ்ஸி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கொரோனாவுக்கு முன்பு எப்படி அமேசான் நிறுவனம் செயல்பட்டதோ அந்த நிலைக்கு அடுத்த ஆண்டு முதல் திரும்பப் போகிறோம் எனக் கூறியுள்ளார். இதன்படி ஊழியர்கள் வாரத்தின் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகளும் பொதுமுடக்க அறிவிப்பை வெளியிட்டன. இதனால் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தன. பின்னர் இந்த கொள்கை படிப்படியாக மாற்றப்பட்டு வாரத்தின் மூன்று நாட்கள் அலுவலகம் ,மீதமுள்ள நாட்கள் வீட்டிலிருந்து வேலை என ஹைபிரிட் வேலை முறை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸ்ஸி ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ”கடந்த 15 மாதங்களாக ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகிறார்கள், இது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அலுவலகத்தில் வந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது நிறுவனத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்பதால் அடுத்த ஆண்டு முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும், அதாவது கொரோனாவுக்கு முந்தைய சூழலுக்கு நிறுவனம் திரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அலுவலகத்திற்கு வந்து பணி புரியும்போது ஒரு குழுவாக செயல்படும்போது பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, அதற்கான பயிற்சியை பெறுவது, மேலும் ஒருவரை ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வது ஆகியவை எளிதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இதன்படி 2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இது தொடர்பான முடிவினை அவர் சார்ந்த பிரிவின் தலைவர்கள் தான் எடுப்பார்கள் என கூறியுள்ளார்.
உதாரணமாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அல்லது வீட்டில் ஒரு எமர்ஜென்சி உள்ளிட்ட சூழல்களில் வீட்டிலிருந்து பணிபுரியலாம் என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications