கரூர்: நம்முடைய பூமி தாய்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை பிளாஸ்டிக் கழிவுகள் தான். இதில் பெரும்பாலான கழிவுகளுக்கு காரணமாக இருப்பவை பிளாஸ்டிக் பாட்டில்கள். இவை எளிதில் மக்குவதில்லை என்பதால் பல உயிரினங்களுக்கும் ஆபத்தாக இருக்கின்றன.
அப்படிப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை ஆடையாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சங்கர். இவரது நிறுவனம் நாள்தோறும் 15 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை ஆடைகளை உருவாக்க உதவும் பாலியஸ்டர்களாக மாற்றி வருகிறது.

உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு ஃபேப்ரிக் பாலியஸ்டர். இதனை பெட் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரித்து இவர்கள் வழங்குகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகிறது, மட்டுமின்றி பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.
தற்போது பல்வேறு பிரபல பிராண்டுகள் கூட இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் பாலியஸ்டர்களை கொண்டு தங்களுடைய பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. கரூரில் இயங்கி வரும் ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் பிளாஸ்டிக் பாட்டில்களை பாலியஸ்டர்களாக மாற்றி இந்த பூமிக்கு பெரிய சேவையாற்றி வருகிறது.
இந்த சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டர்களை உருவாக்கும் யோசனை தனக்கு உருவானதாக கூறுகிறார் இதனை நிறுவிய சங்கர். டெல்லி ஐஐடியில் பயின்ற இவர் பல்வேறு சவால்களை சந்தித்து தான் இத்தனை பெரிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது அவரது மகன் செந்திலும் தந்தையுடன் சேர்ந்து தொழிலை கவனித்து கொள்கிறார். பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக இவர்கள் வாங்கி அதனை பல வழிகளில் நடைமுறைப்படுத்தி பாலியஸ்டர்களாக மாற்றுகின்றனர்.
முதலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டர் பைபர்களை உருவாக்கி அதன் பின்னர் அதில் இருந்து துணிகளையும் தயாரிக்கின்றனர. தற்போது பல்வேறு பெரிய பெரிய நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான ஆடைகள் என்ற தலைப்பில் இதுபோன்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்படும் பாலியஸ்டர்களில் உருவாக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்கின்றன.
கரூர் அருகே காக்கா வாடி பகுதியில் தான் இவர்களது ஆலை அமைந்திருக்கிறது. பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் பாலியஸ்டர்கள் பைபர்கள் மூலம் உருவாக்கப்படும் ஆடைகளுக்காக ஈகோலைன் கிளாத்திங் என்ற பிராண்டையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் ஒரு நாளைக்கு 15 லட்சம் பாட்டில்களை மறுசுழற்சி செய்து சராசரியாக 25 டன் பாலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கூட ஒரு நிகழ்ச்சியில் இந்த நிறுவனம் தயாரித்த ஜாக்கெட்டை அணிந்து இருந்தார்.
இதனை அடுத்து இவர்களது நிறுவனமும் இவர்களது தயாரிப்பும் இந்திய அளவில் புகழ்பெற்றது. பெரிய , பெரிய நிறுவனங்களும் இவர்களிடம் இருந்து நூல்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் இவர்களின் முயற்சிக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications