சாவ்ஜி தோலாகியா, தன்னுடைய ஊழியர்களுக்கு அவ்வப்போது மெர்சிடிஸ் , பிஎம்டபிள்யூ உள்ளிட்ட உயர் ரக கார்களையும், சொந்தமாக வீடுகளையும் பரிசாக வழங்கி இந்தியா முழுவதும் இப்படி ஒரு முதலாளி நமக்கு இல்லையே என ஏங்க வைத்தவர்.
பத்மஸ்ரீ விருதுக்கு சொந்தக்காரர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் ஐந்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர் . ஆனால் தற்போது 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். குஜராத் மாநிலத்தின் துபாலா கிராமத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் . 1977 ஆம் ஆண்டு வெறும் 12 ரூபாய் 50 காசுகளோடு குஜராத்தில் இருந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக கொண்டு சூரத்தை நோக்கி புறப்பட்டார் . தன்னுடைய குடும்பத்திற்கு உழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சூரத்திற்கு சென்றார்.

முதலில் ஒரு வைர நிறுவனத்தில் மாதம் 169 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார் . அதில் ஒவ்வொரு மாதமும் 39 ரூபாயை அவர் சேமித்தார். இந்த வேலை அவருக்கு வைர வியாபாரம் எப்படி செயல்படுகிறது என்ற நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தது. 1984 ஆம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ஒரு சிறிய டைமண்ட் தொழிலை தொடங்கினார். அந்த சமயத்தில் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டாலும் அவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். ஊழியர்களை ஊழியர்களாக நடத்தக்கூடாது குடும்பத்தினராக நடத்த வேண்டும் என முடிவு செய்த அவர் தொடக்க முதலே ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்க தொடங்கினார்.
இதன் மூலம் ஊழியர்கள் இன்னும் உற்சாகத்துடன் வேலை செய்ய தொடங்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது இவர் வழங்கக்கூடிய பரிசு அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக இடம் பெற தொடங்கியது. வீடு ,ஸ்கூட்டர் ,ஆடம்பரக்கார் உள்ளிட்டவற்றை வழங்குவார். என்னுடைய ஊழியர்களின் குடும்பம் வளமடையும்போது என்னுடைய தொழிலும் வளமடைகிறது என அடிக்கடி கூறுகிறார்.
கடந்த ஆண்டு கூட 25 ஆண்டுகள் நிறுவனத்தில் வேலை செய்த மூன்று மூத்த ஊழியர்களுக்கு மெர்சிடி பென்ஸ் ரக காரை பரிசாக வழங்கினார். ஹரி எக்ஸ்போர்ட்ஸ் தற்போது 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இந்த வெற்றிக்கு வெற்றிக்கான பாராட்டை அவர் எப்போதுமே தன்னுடைய ஊழியர்களுக்கு தான் வழங்குகிறார். பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தாலும் பெரிய வைர வியாபாரியாக இருந்தாலும் இவர் எளிமையான ஒரு மனிதராக அறியப்படுகிறார்.
தோலாக்கியா என்று ஒரு அறக்கட்டளையை நடத்தி அதன் மூலம் பலருக்கும் உதவி செய்கிறார் . அது மட்டும் இன்றி பல இடங்களிலும் மரக்கன்றுகளை நடுவது நீர் சேமிப்பு திட்டங்களுக்கு உதவி வழங்குவது உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தொழில் செய்து பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு சமூகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் திரும்ப பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications